பார் போற்றும் மகாகவி பாரதியாரின் நினைவு நாள்....

புதன், 11 செப்டம்பர் 2019 (17:37 IST)
தமிழகத்தில் பாரதியைப் போன்று சங்ககாலம் முதல் கவிதை படைக்கக்கூடிய ஆயிரம் ஆயிரம் புலவர்கள் இருந்ததுண்டு. ஆனால் பாரதியிடம் இருந்த காக்கை குருவிகள் எங்கள் சாதி என்று சொன்ன அந்தப் பரந்த மனப்பான்மையும், தேடலும், இந்த தமிழகத்தின் இலக்கியப் பரப்புகளைத் தாண்டி உலக இலக்கிய எல்லைகளையும் தொட்டுச் சென்றார் என்றால் அது மிகையல்ல. அதுதான் , இப்பிரபஞ்சத்திற்கு, அவரை மகாகவியாக அறிமுகம் செய்துவைத்தது.
பாரதியினைக் கண்டவர்கள், அவரது படைப்புகளில் மூழ்கி முத்தெடுத்த கவிஞர்கள் எல்லோரும் ஒப்புக்கொள்ளக் கூடியது ஒரு உண்மையுடன் கூடிய ஆச்சர்யம் என்னவென்றால், அவர் ’பட்டிணியுடன் புதுச்சேரியில் மற்றும் தமிழகத்தில்  போராட்ட வாழ்வு நடத்திய போது, எப்படி இந்த நெருப்புக் கவிதைகளைக் காகிதவயிற்றில் பிரசவித்தார் என்பதுதான்.’
 
இன்று, மாணவர்கள் தம் பத்து வயதில் பாரதியின் கவிதைகளைப் பாடப்புத்தகத்தில் படிக்கின்ற வயதில், அன்று பாரதி எட்டயபுரம் அரசவைக் கவிஞர்களிடம் சொற்போர் நடத்திக்கொண்டிருந்ததைப் பற்றி என்னவென்று கூறுவது? அதற்கு ஒரே பதில், அதுதான் பாரதி !
 
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், அவர்களுக்கு எதிராகச் சுதேசியக் கப்பல் விட்ட, தேசபிமானி, வ.ஊ., சிதம்பரனார் பாரதியைப் பற்றிக் கூறும்போது, பாரதி அறிவின் சிகரம் என்று தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தபோது, ஆங்கிலத்தில் அவர்களைப் பற்றி துணிச்சலாகக் எழுதி, வறுமையில் புத்தகம் வாங்கிப் படித்து, கவிதையாகவே வாழ்ந்து, உலகக் கவிஞர்களை  தமிழுக்கு அறிமுக செய்து வைத்து ; தமிழகப் புலவர்களையும் தம் பாட்டில் அடியெடுத்து வைத்து அவர் பாடித்தந்த பாடல்கள் அத்துணையும் சிரஞ்சீவி ரகம். 
 
உலகம் இருக்கும் வரை பாரதியின் படைப்புகள் வாழும். அவரது நினைவு நாளில்நாமும் , அவரைப்  போற்றுவோம்... 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்