விஜய்யின் ஆரம்பகாலப் படங்கள் தொடங்கி 25 வருடக் காலமாக அவருக்கு மேனேஜராக இருந்து வந்தவர் பி.டி. செல்வக்குமார். மேலும் விஜய்யின் படங்கள் அனைத்திற்கும் மக்கள் தொடர்பாளராகவும் செயல்பட்டிருக்கிறார். இதனால் விஜய்க்கும் இவருக்கும் நல்ல நட்பு இருந்து வந்துள்ளது. இந்த நட்புக் காரணமாக விஜய் தனது புலிப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக செல்வக்குமாரையும் இணைத்துக் கொண்டார்.
ஆனால் புலிப் படத்திற்குப் பிறகு இருவரது நட்பில் விரிசல் விழுந்துள்ளதாகவும் அதனால் இவரை விஜய் தனது பி.ஆர்.ஓ. பதவியில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் நீக்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அதன் பிறகு சில படங்களைத் தயாரித்த செல்வக்குமார் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குப் பேட்டியளித்த போது ‘விஜய் முன்பெல்லாம் சக நடிகர்களப் போட்டிக்கு அழைப்பதில் ஆர்வம் காட்டுவார், ரஜினியை விட விஜய்யின் படங்கள் அதிக அளவில் வசூல் செய்கின்றன, விஜய் முதல் இடத்திற்கு வந்துவிட்டார். ரஜினியும் அஜித்தும் இரண்டாம் இடத்திற்குப் போட்டியிடுகின்றனர்’ எனச் சர்ச்சையானக் கருத்துகளைக் கூறினார்.
இந்த கருத்துகளால் அதிருப்தியுற்ற விஜய் தனது மக்கள் இயக்கம் மூலமாக பி டி செல்வக்குமாருக்கும் தங்கள் மக்கள் இயக்கத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், அவர் இப்போது விஜய்க்கு மேனேஜராக இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினர். மேலும் அவர் கூறும் தனிப்பட்ட கருத்துகளை விஜய்யின் கருத்தாகவோ அல்லது மக்கள் இயக்கத்தின் கருத்தாகவோ யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் ரசிகர்களுக்கு மக்கள் இயக்க நிர்வாகி ஆனந்த் அறிவுறுத்தியிருந்தார்.இதனால் விஜய்க்கும் செலவ்க்குமாருக்கும் என்னதான் பிரச்சனை எனப் பலவாறுக் கேள்விகள் எழுந்தன. அந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக பி.டி. செல்வக்குமார் இன்று பதில் அளித்துள்ளார்.
பி.டி. செல்வக்குமார் கூறியுள்ளதாவது :-
விஜய் சாருக்கும் அவருடைய அப்பாவிற்கும் நான் 25 வருடங்களுக்கு மேலாக நம்பிக்கையுள்ள மனிதராக மக்கள் தொடர்பாளராக அவர்களின் குடும்பத்தில் ஒருவராக இருந்து வந்தேன். பேட்டி கொடுப்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். விஜய் சாரின் பெயரை பயன்படுத்தி யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பேட்டி கொடுக்கவில்லை. என்னுடைய தனிப்பட்ட கருத்தை தான் நான் பதிவு செய்திருந்தேன்.இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொண்டு சிலர் எங்களுக்கு பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்யும் செயலாக தான் எனக்கு தெரிகிறது.
நான் எந்தளவிற்கு உண்மையானவர் என்பது விஜய்க்கும் தெரியும். அவருடைய குடும்பத்தாருக்கும் தெரியும். என் மீது நம்பிக்கை இருந்ததால் தான் எனக்கு புலி படத்தை தயாரிக்கும் வாய்ப்பை கொடுத்திருந்தார்.நான் விஜய்க்கு மக்கள் தொடர்பாளராக மட்டுமில்லாமல் ஒரு ரசிகனாகவும் இருந்து வந்தேன். தற்போதும் அப்படி தான் இருந்து வருகிறேன் என கூறினார். மேலும் இளையராஜாவின் ராயல்டி தொகைக்கு எதிராக குரல் கொடுப்பது ஒரு தயாரிப்பாளராக சகா தயாரிப்பாளர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் எனவும் பதிலளித்தார்.
விஜயின் ஆதி, தலைவா, காவலன், மெர்சல் போன்ற படங்களின் பிரச்சனைகளின் போதும் அவருடன் இருந்துள்ளேன். தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ரூ 100 கோடிக்கு அதிகமான விற்பனையான படம் என்றால் அது புலி படம் தான் என கூறினார். மேலும் காவலன் பட ரிலீஸின் போது ஆளுங்கட்சியாக திமுக பிரச்சனை செய்த போது கூட நான் 50 லட்சம் கடன் வாங்கி அந்த படத்தை ரிலீஸ் செய்தேன் இது அனைவருக்குமே தெரிந்த உண்மை எனவும் கூறினார்.
அவர் மீது அன்பும் மரியாதையும் இருப்பதால் தான் என்னால் உண்மையான உழைப்பை கொடுக்க முடிந்தது. புலி படத்தின் போது ஐ.டி ரைடு வந்த போதும் கூட அவருக்கு துணையாக இருந்து வந்தேன் என கூறினார்.தற்போது விஜய் சாருக்கு பி.ஆர் ஓ-வாக இல்லை என்றாலும் அவருடன் ஒரு நல்ல குடும்ப நண்பராக தான் இருந்து வருகிறேன். அதுமட்டுமில்லாமல் விஜய் சாரின் பெயரை பயன்படுத்தி தன்னை வெளிப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை.
தற்போதும் நான் பல படங்களுக்கு பி.ஆர்.ஓ-வாக பணியாற்றி வருகிறேன். சமீபத்தில் வெளியான விஷாலின் இரும்புத்திரை படம் பிரச்சனைகளை சந்தித்த போது அதனை தீர்த்து மிக பெரிய வெற்றி படமாக அமைய செய்திருந்தேன் எனவும் பதிலளித்தார்.இன்று வரை நான் விஜய்க்கும் விஜய் குடும்பத்திற்கும் உண்மையான விஸ்வாசம் உள்ள மனிதராக தான் இருந்து வருகிறேன் என கூறினார். எனக்கும் விஜய்க்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இறுதியில் உண்மை வெளிச்சத்துக்கு வரும்.