உச்ச நட்சத்திரம் நடித்த படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. ஆனால், அவரோ தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க இன்றே டேராடூன் கிளம்பிச் சென்றுவிட்டார். சூரிய நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஒல்லி இசையமைப்பாளர் இசையமைக்கிறார். சைலண்ட் த்ரில்லர் படத்தை இயக்கியவர், இந்தப் படத்தை இயக்குகிறார்.
உச்ச நட்சத்திரம் இந்தப் படத்தின் ஷூட்டிங்குக்காக விமான நிலையம் செல்ல வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது பத்திரிகையாளர்களிடம் அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, அவருடைய இளைய மகள், ‘தலைவர் அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி விட்டார். மல்ட்டிபிள் ரோல்ஸ்’ என்று ட்விட்டரில் பதிவிட்டார்.
உடனே, ‘படத்தில் எத்தனை வேடங்கள்?’ என்று கேட்டு பல ட்வீட்டுகள் அவருக்கு குவிந்தன. இது தயாரிப்பு நிறுவனத்தின் காதுக்குப் போக, நேரடியாக உச்ச நட்சத்திரத்துக்கே போன் போட்டு காய்ச்சி எடுத்து விட்டார்களாம். அவர் மகளிடம் புலம்ப, ‘வேடங்கள் என்று தலைவரின் வாழ்க்கையைச் சொன்னேன். படத்தைப் பற்றி இயக்குநர் சொல்வார்’ என்று இன்னொரு ட்வீட் போட்டு ஜகா வாங்கிவிட்டார் மகள்.