தற்போது உலகம் முழுவதும் பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப் டீல் போன்ற ஆனலைன் வர்த்தக நிறுவனங்கள்தான் மின்னணு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறக்கின்றன. இந்தியா போன்ற நாடுகளில் பல்வேறு இன, மொழி மற்றும் கலாச்சார வேறுபாடு கொண்ட மக்கள் வாழும் நாடுகளில் இந்த ஆன்லைன் வியாபாரம் களைகட்டி வருகிறது.
ஓவ்வொரு ஆண்டும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குப் புதுப்புது சலுகைகள் அளித்துவரும் நிலையில் இந்தாண்டு பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது நோ காஸ்ட் இ.எம்.ஐ (No cost EMI) எனப்படும் வட்டியில்லா தவணைக் கடன். இந்தாண்டு நடந்த மொத்த ஆன்லைன் விற்பனையில் 20 சதவீதத்திற்கு மேல் இந்த வட்டியில்லாத் தவனைக் கடன் மூலம் நடைபெற்றிருக்கிறது.
மிக வேகமாக வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த வட்டியில்லாத் தவணை முறை மூலம் உண்மையிலேயே வாடிக்கையாளர்கள் லாபம் அடைகிறர்களா? அல்லது இவையெல்லாம் வாடிக்கையாளர்களை ஏமாற்ற பெருநிறுவனங்கள் கடைபிடிக்கும் உத்தியா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதைப் பற்றி விவரமறிந்தவர்கள் கூறும் கருத்து அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது.
வட்டியில்லாத் தவணை என்பது முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களை ஏமாற்றும் உத்தி எனக் கூறும் அவர்கள் அதுகுறித்த விளக்கங்களையும் அளித்துள்ளனர். அதில் ‘வாடிக்கையாளர்கள் வட்டியில்லாத் தவணையில் 1000 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள் என்றால் அந்த 10000 ரூபாயை 5 மாதத்தில் மாதம் ரூ 2000 வீதம் வட்டியில்லாமல் கட்டலாம் என்கிறது நோ காஸ்ட் இ.எம்.ஐ.. இதில் என்ன குழப்பம் எளிதான மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நன்மை அளிக்கும் திட்டம்தானே என நீங்கள் யோசித்தால் அங்குதான் நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள். நீங்கள் மொத்தமாகக் கட்டும் 10000 ரூபாய் அந்தப் பொருளின் அடக்க விலையாக இருக்காது. உதாரணமாக அந்தப் பொருளின் விலை 9000 ரூபாயாகதான் இருக்கும். அதன் அடக்கவிலையை 10000ரூபாயாக உயர்த்தி வாடிக்கையாளர் தலையில் கட்டிவிடுகின்றன இந்த ஆன்லைன் நிறுவனங்கள். ஆக நீங்கள் 9000 ரூபாய் விலையுள்ள பொருளை அதற்கான வட்டியுடன் சேர்த்துதான் (10000) ஐந்து மாதத்தில் தவணைகளாக கட்டுகின்றீர்கள் இதில் இருக்கும் ஒரே நன்மை பொருளை நாம் அதன் அடக்க விலையில் வட்டியில்லாமல் வாங்கிவிட்டோம் என்ற அற்ப சந்தோஷம்தான்.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி என்ன சொல்லுகிறது தெரியுமா? நோ காஸ்ட் இ.எம்.ஐ என்பது ஒரு மார்க்கெட்டிங் உத்தி மட்டும்தான். நிறுவனங்கள் எப்படியாவது பொருளுக்கான வட்டியை தவணைகளில் இணைத்து விடும் என தெரிவித்துள்ளது. மேலும் 5 ஆண்டுகளுக்கு முன்பே வாடிக்கையாளர்களுக்கு ஜீரோ சதவீத வட்டிவீதத்தில் எந்த ஒரு கடனும் கொடுக்க கூடாது என வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அப்படி இருக்கையில் எப்படி வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி நோ காஸ்ட் இ.எம்.ஐ யில் பொருட்களை வாங்க முடியும் கேள்வியெழுப்புகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.