சென்னையில் மடிக்கணினி கண்காட்சி

வியாழன், 17 ஜூலை 2008 (16:49 IST)
சென்னையில் வரும் சனிக்கிழமையன்று (19-ம் தேதி) மாணவர்களுக்கான மடிக்கணினி (Lap-Top) கண்காட்சி நடைபெறுகிறது.

நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மின்னணு உற்பத்தி பொருட்களின் 3 நாள் கண்காட்சியை தொடங்கிவைத்துப் பேசிய எல்காட் நிறுவன நிர்வாக இயக்குனர் உமாசங்கர் இதனைத் தெரிவித்தார்.

மின்னணு உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி மூலம் தமிழகத்தில் உள்ள அடிப்படை வசதிகளை உலக நாடுகளின் நிறுவனங்கள் அறிந்து, தங்கள் நிறுவனங்களை இங்கு அமைக்க முடியும் என்று அவர் கூறினார்.

லண்டன், சிங்கப்பூர், தைவான் உள்பட பல நாடுகளில் இருந்து 40 நிறுவனங்களும், இந்தியாவில் இருந்து 56 நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்று உள்ளன.

மாணவர்களுக்கு குறைந்த செலவில் லேப்-டாப் விற்பனை செய்யும் திட்டத்தை எல்காட் அறிமுகப்படுத்தி உள்ளதாகக் கூறிய அவர், முதற்கட்டமாக 15 ஆயிரம் மடிக்கணினிகள் விற்பனை செய்யப்படும் என்றார்.

மடிக்கணினிகளின் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் மடிக்கணினி கண்காட்சி 19-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் அவர் கூறினார்.

சென்னையில், நந்தனத்தில் உள்ள எல்காட் நிறுவனத்திலும், மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் கண்காட்சி நடைபெறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்