மெக்கல்லம்மின் விசிறியான தோனி! உண்மையில் மெக்கல்லம் 300 அடிக்கும் வீரர்தானா?

செவ்வாய், 18 பிப்ரவரி 2014 (15:36 IST)
மெக்கல்லம் வரலாறு படைத்தார்! 84 ஆண்டுகால நியுசீ. வரலாற்றில் ஒருவர் கூட முச்சதம் கண்டதில்லை. அதனால் அந்த நாட்டு கிரிக்கெட்டில் இது ஒரு மைல் கல் என்பதி சந்தேகமில்லை. ஆனால் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி, "ஒரு கிரிக்கெட் விசிறியாக மெக்கல்லம் நன்றாக விளையாடினார்"என்று கூறியுள்ளார்.
FILE

ஒரு வீரரின் திறமை என்ன அவர் எந்த அளவுக்கு ஆட முடியும், அவரது பேட்டிங் வரம்பென்ன ஒன்றும் அறியாதவர் தோனி, அதனால்தான் மெக்கல்லம் இன்னிங்ஸை ஒரு கிரிக்கெட் விசிறியாக ரசித்தேன் என்கிறார். அதனால்தானோ என்னவோ 300க்கும் சற்று முன்னால் கேட்ச் ஒன்றை கோட்டை விட்டு அசடு வழிய சிரிப்புச் சிரித்தார் போலும்.

சரி அதை விடுவோம் மெக்கல்லமின் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரிங் வரலாற்றைப் பார்ப்போம்:

2004ஆம் ஆண்டு அவர் அறிமுகம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் 57, 19 நாட் அவுட். அதன் பிறகு 11வது இன்னிங்ஸில் வங்கதேசத்திற்கு எதிராக 2004, அக்டோபரில் 143 ரன்கள் அடிக்கிறார். அவரது முதல் சதம்.
FILE

அதன் பிறகு 9 இன்னிங்ஸ்களில் அரை சதம் கூட இல்லை. 2005-இல் நேபியரில் இலங்கைக்கு எதிராக 99 அடிக்கிறார். பிறகு ஜிம்பாவே தொடரில் ஹராரேயில் 2005 ஆகஸ்ட் மாதம் 111 ரன்கள் எடுக்கிறார். அதன் பிறகு 19 இன்னிங்ஸ்கள் அரை சதமே கிடையாது.

பிறகு 3 ஆண்டுகள் கழித்து 2008-இல் ஹேமில்டனில் இங்கிலாந்துக்கு எதிராக 51 அடிக்கிறார். பிறகு அதே தொடரில் வெலிங்டனில் 25, 85. லார்ட்சில் இங்கிலாந்துடன் 97. பிறகு வங்கதேசத்தில் 25,66. பிறகு 2008-இல் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான தொடர் முழுதும் ஊற்றிக் கொள்கிறது. அடிலெய்டில் ஒரு 84 நாட் அவுட் அவ்வளவுதான்.

பிறகு 2009ஆம் ஆண்டு நேபியரில் இந்தியாவுக்கு எதிராக 115. மீண்டும் இந்தியா வாழ்வு அளிக்கிறது அவருக்கு. ஆனால் அதே தொடரில் மேலும் எழும்ப முடியவில்லை. ஊற்றல். பிறகு பாகிஸ்தான் நியூசீலாந்து செல்கிறது. ஒரு 78 பிறகு ஒரு 89 அவ்வளவுதான்.
FILE

மீண்டும் வங்கதேசம் மாட்டுகிறது 2010ஆ ஆண்டு. வெளுக்கிறார் ஒரு 185. மீண்டும் இந்தியா வருகிறது நியூசீலாந்து ஐதராபாதில் மீண்டும் இந்தியா ஒரு 225 ரன்களை அவருக்கு வாரி வழங்குகிறது.

பாகிஸ்தான் நியூசீ. செல்கிறது. அப்படியே ஊற்றி மூடிக்கொண்டார். மீண்டும் ஜிம்பாவே மாட்டுகிறது ஒரு 83 அடிக்கிறார். மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஊற்றல். 2012 வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அரை சதம் கூட இல்லாமல் போகிறது.

2010 இந்தியாவில் ஐதராபாதில் 225 அடித்த பிறகு அவர் நேராக 2013ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டுனெடினில் 113 ரன்கள் எடுக்கிறார்.

இப்போது இந்தியாவுக்கு எதிராக 224,1, 8, 302. இதுதானப்பா மெக்கல்லமின் ஸ்கோரிங் வரலாறு. 9 சதங்களில் இந்தியாவுக்கு எதிராக 4 சதங்கள் அதில் 2 இரட்டை சதம் ஒரு முச்சதம்.

2010ஆம் ஆண்டு மட்டுமே அவர் 6 போட்டிகளில் 758 ரன்கள் சராசரி 75. அதில்தான் இந்தியா 225 ரன்களை வாரி வழங்கியது. அதன் பிறகு தற்போது 2014ஆம் ஆண்டு 133.75. காரணம் இந்தியா. உள்நாட்டில் 43 போட்டிகளில் அதிக சராசரி அதாவது 47 ரன்கள் சராசரி வைத்துள்ளார்.

அயல்நாட்டில் 41 போட்டிகளில் 2,153 சராசரி வெறும் 29.90.

இதுதான் மெக்கல்லம், ஆடிக்கு ஒரு சதம் அமாவாசைக்கு ஒரு சதம் என்று கூட அவரது வரலாறு இல்லை. கேட்ச்களை கோட்டை விட்டு, பவுலர்களுக்கு தப்பும் தவறுமாக பீல்டிங் செட் அப் வைத்து, மெக்கல்லமுக்கு ஆதரவாக பீல்ட் செட் அப் செய்து விட்டு அவர் பிரமாதமாக விளையாடுகிறார். கிரிக்கெட் விசிறியாக நான் ரசித்தேன் என்று கூறினால் தோனியின் கிரிக்கெட் சிந்தனை குறித்து நாம் சந்தேகப்படாமல் என்ன செய்வது?

நாளை இங்கிலாந்து தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சனையும் சதம் அடிக்கவிட்டு, அவர் பிரமாதமாக விளையாடினார், அவருக்கென்ன குறைச்சல்? என்று கேட்கலாம்.

தோனியை முதலில் ஜார்கண்ட் அணிக்கு ரஞ்சி போட்டிகளில் கேப்டன்சி செய்யச்சொல்லி அவரது கேப்டன்சி லட்சணங்களை கர்நாடகா போன்ற அணிகள் அம்பலப்படுத்துவதை பார்க்கவேண்டும்.

ரஞ்சியே ஆடாமல் நேராக கொண்டு டெஸ்ட் கேப்டன்சியைக் கையில் கொடுத்தால் அவரது தத்துப் பித்து கேப்டன்சிகளையும், அதைவிட அவரது தத்துப் பித்து உளறல்களையும்தான் நாம் கேட்டு பூரிக்கவேண்டியிருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்