ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று (ஆடு) பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடு) எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத் தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே. (ஆடு) எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும் ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனி நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே. (ஆடு) உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம். விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம் - வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம். (ஆடு) நாமிருக்கும் நாடு நமது என்ப தறிந்தோம் - இது நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப் பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் - பரி பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். (ஆடு)
பாரத மாதாவின் கொடி! -தேசக் கவி பாரதியார்
பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்
webdunia photo
WD
(தாயுமானவர் அனந்தக்களிப்பு வர்ண மெட்டு)
தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன் உச்சியின் மேல்வந்தே மாதர மென்றே பாங்கி னெழுதித் திகழும் - செய்ய பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)
பட்டுத் துகிலென லாமோ? - அதிற் பாயந்து சுழற்றும் பெரும்புயற் காற்று மட்டு மிகுந்தடித் தாலும் - அதை மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம் (தாயின்)
இந்திரன் வச்சிர மோர்பால் - அதில் எங்கள் துருக்க ரிளம்பிறை யோர்பால் மந்திர நடுவுறத் தோன்றும் - அதை மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)
கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் - எங்கும் காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம் நம்பற் குரியரவ் வீரர் - தங்கள் நல்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பார். (தாயின்)
அணியணி யாயவர் நிற்கும் - இந்த ஆரியக் காட்சியோ ரானந்த மன்றோ? பணிகள் பொருந்திய மார்பும் - விறற் பைந்திரு வோங்கும் வடிவமுங் காணீர் (தாயின்)
செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந் தீக்கண் மறவர்கள், சேரன்றன் வீரர் சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின் சேவடிக் கேபணி செய்திடு துளுவர், (தாயின்)