இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அயல்நாட்டு வீராங்கனை!

புதன், 13 ஆகஸ்ட் 2008 (16:36 IST)
இன்று 62வது ஆண்டு சுதந்திரக் காற்றை நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.

webdunia photoWD
நமது முன்னோர்கள் பலர் வெள்ளையர்களுக்கு எதிராக போராடி உயிரதியாகம் செய்து, இந்த சுந்திரத்தை நமக்கு பெற்று தந்துள்ளனர் என்பதை நாம் அறிவோம்.

பல்வேறு வீர மங்கைகளும் வெள்ளையர்களை எதிர்த்து போராடி உயிர் நீத்து, 'சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல' என்று நிரூபித்து காட்டினர்.

இந்த தியாகிகள் எல்லாம் நம் இந்திய மண்ணை சேர்ந்தவர்கள். தாய்நாட்டை மீட்க மண்ணின் மைந்தர்களாக அவர்கள் நடத்தியப் போராட்டத்தை நாம் அறிவோம்.

ஆனால், இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக அயல்நாட்டு பெண்மணி ஒருவர் தனது இறுதி மூச்சுவரை போராடி உயிர் நீத்ததை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நமது நாட்டு தியாகிகளை நினைவு கூறும் அதே நேரத்தில் அந்த அயல்நாட்டு பெண் தியாகியையும் நாம் அறிய வேண்டியது மிக அவசியம்.

லண்டனில் பிறந்து, பாரீசில் வளர்ந்து, ஜெர்மனியில் இல்லற வாழ்க்கையை நடத்தி, இறுதியில் இந்தியா வந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று வெள்ளையர்களையே கதி கலங்க வைத்த அந்த வீரமங்கை அன்னி பெசன்ட் அம்மையார்.

இளமைப் பருவம்:

1847ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி லண்டனில் பிறந்தார் அன்னி பெசன்ட். இவரது பெற்றோர் டாக்டர் வில்லியம் பேஜ்வுட்- தாயார் எமிலி.

webdunia photoWD
அன்னி பெசன்டின் 5வது வயதிலேயே அவரது தந்தையார் மரணமடைந்ததார். இதனால் வறுமைக்கு தள்ளப்பட்ட எமிலி, தனது இன்னொரு குழந்தை ஹாரியை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதற்காக, அன்னி பெசன்டை தனது உறவினரான மிஸ் மேரியாட் என்பவரிடம் ஒப்படைத்தார்.

இதனால், தனது 7வயதில் மிஸ் மேரியாட்டுடன் பாரீஸ் பறந்தார் அன்னி. செல்வச்செழிப்பில் வளர்ந்த அவர் இளம் வயதிலேயே குதிரையேற்றம், வில் வித்தை போன்ற வீர விளையாட்டுக்களை கற்று தேர்ந்தார். பல மொழிகளை எளிதில் கற்றார்.

தனது 14 வயதில் ஜெர்மனி சென்றார் அன்னி பெசன்ட். இளமையில் பேரழகியாக திகழ்ந்தார். 1866ல் பிராங்க்பெசண்ட் என்பவர் விரும்பி திருமணம் செய்து கொண்டார். அப்போது அன்னி பெசன்டுக்கு வயது 20.


ஒரு கிறிஸ்தவ மதபோதகரான பிராங்க்பெசண்ட் பல்வேறு சம்பிரதாயங்களை கடைப்பிடித்தார். இரு குழந்தைகள் பிறந்த நிலையில், அவரது அடக்குமுறை பிடிக்காமல் 1873இல் விவகாரத்து பெற்று சுதந்திர பறவையாக வெளியே வந்தார் அன்னி பெசன்ட்.

இதன் பின்னர் சமூக சேவையில் ஆர்வம் கொண்டு 1875 நவம்பர் 17ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள பிரம்ம ஞான சபையில் இணைந்தார்.

மத நல்லிணக்கம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட இந்த அமைப்பின் தலைவராக 1891ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.

இதன் பின்னர் மத நல்லிணக்கத்தை பரப்பும் நோக்கில் இந்தியா வர விரும்பினார் அன்னி பெசன்ட்.

இதற்காக அப்போதைய ஆங்கில அரசுடன் கடுமையாக போராடி அனுமதி பெற்று, 1893ம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி இந்தியா வந்திறங்கினார்.

அப்போதுதான் இந்திய மக்கள் அடிமைப்பிடியில் சிக்கி கிடப்பது அவருக்கு தெரியவந்தது. இந்திய மக்களின் உடனடி தேவை சுந்திரம் என்பதை உணர்ந்து கொண்ட அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இறங்குவது என்ற முடிவுக்கு வந்தார். அப்போது அவருக்கு வயது 47.

சுதந்திரப் போராட்டம்:

"இந்தியா ஒரு புண்ணிய பூமி. இங்கு பிறக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். எனது தாய்நாடு இந்தியா. இந்தியர்கள் அனைவரும் என் சகோதரர்கள். இந்தியாவை இந்தியர்களே ஆள வேண்டும். வெள்ளையர்கள் உடனே வெளியேற வேண்டும்" என்று முழுங்க ஆரம்பித்தார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் எவ்வளவோ குரல் கொடுத்தும் சுதந்திர வேட்கை பெறாதவர்கள் கூட, வெளிநாட்டு பெண்மணி ஒருவர் நமது குரல் கொடுப்பது கண்டு புதிய உத்வேகம் பெற்றனர்.

webdunia photoWD
ஆன்மிகத்தை பரப்ப வந்தவர் சுதந்திரத்துக்காக போராடுவது கண்டு அதிர்ச்சியடைந்த வெள்ளையர்கள், அன்னி பெசன்ட் அம்மையாருக்கு பல்வேறு இன்னல்கள் தர ஆரம்பிக்க, 1913இல் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார். முன்னைவிடவும் மிக கடுமையாக போராட ஆரம்பித்தார்.

கொல்கட்டாவில் 1918ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அன்னி பெசன்ட் நிகழ்த்திய உரை வீச்சு மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையை மேலும் கிளறச் செய்தது.

"ஆங்கிலேய நாட்டில் இந்தியர் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதை அனுமதிப்பீர்களா? நாங்கள் அடிமை மக்களாக ரயிலில் பயணிப்பதை விட, சுதந்திர இந்தியனாக கட்டை வண்டியில் பயணம் செய்யவே விரும்புகிறோம்" என்ற அவரது வீர முழக்கம் ஆங்கிலேயர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக தனக்கும், தன்னுடன் சேர்ந்து குரல் கொடுக்கும் பெண்களுக்கும் தொல்லைகள் அதிகமாக, தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள அவர் 1917இல் அமைத்தது தான் மாதர் சங்கம்.

அதன் மூலமே பெண்களுக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார். இன்று பெண்கள் ஓட்டுரிமை பெற்றிருப்பதற்கு போராடியது இந்த மாதர் சங்கமே.

இந்தியர்களின் ஒற்றுமைக்கு அப்போது தடையாக இருந்த பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், தீண்டாமை போன்றவற்றையும் எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தார் அன்னி பெசன்ட். இதனால் பெண்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு பெருக ஆரம்பித்தது.

குறிப்பாக பெண் கல்வி‌க்காக சிறப்புக் கவனம் செலுத்தினார். இதற்காக 1898இல் காசியில் மத்திய இந்துக் கல்லூரி, 1904இல் மத்திய உயர் நிலைப்பள்ளி ஆகியவற்றை அமைத்தார்.

சிறந்த நூலாசிரியர்:

அன்னி பெசன்ட் சிறந்த பேச்சாளராக திகழ்ந்தார். இயல்பிலேயே அமைந்த கணீர் குரல், கருத்துக்களை தொடர்ச்சியாக எடுத்து வைக்கும் பாங்கு போன்றவற்றால் அனைவரையும் ஈர்த்தார்.

தனது 82வது வயதிலும் ஐரோப்பாவில் சுமார் 28 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து, 56 முறை சொற்பொழிவாற்றி சாதனை படைத்தார். "இந்தியாவே விழித்தெழு" என்பதுதான் அவரது சொற்பொழிவின் சாராம்சம்.

பேச்சாற்றல் மட்டுமின்றி எழுத்தாற்றலிலும் சிறந்து விளங்கினார். 1904இல் 'பொதுநலம்' என்ற வார இதழையும், 'புது இந்தியா' என்ற நாளிதழையும் தொடங்கினார்.

சுதந்திர வேட்கையை மக்களிடம் தூண்டுவதற்காக இப்படி அவர் நடத்திய பத்திரிகைகளின் எண்ணிக்கை மட்டும் 18.

இதுதவிர, ராமாயணம், மகாபாரதம், இதிகாசங்கள், வீரர்கள், பெண்கள் போன்ற தலைப்புகளில் அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 362ஐ தாண்டும்.

இப்படி, இந்தியாவின் சுதந்திரத்தையே முழுமூச்சாகக் கொண்டு போராடிய அந்த அயல்நாட்டுப் பெண்மணி, 1933 செப்டம்பர் 20ஆம் தேதி தனது 86ஆம் வயதில் மரணம் அடைந்தார்.

இந்திய சுதந்திரத்துக்காக போராடிய இந்திய வீராங்கனைகள் பலர். ஆண் வேடம் தரித்து ஆங்கிலேய சிப்பாய்களை விரட்டியடித்த ஜான்சிராணி லட்சுமி பாய், வாரிசு உரிமைக்காக போராடி இளம் வயதில் உயிர் நீத்த தில்லையாடி வள்ளியம்மை, கணவரின் மரணத்துக்காக வெள்ளையர்களை பழிக்கு பழி வாங்கிய வேலு நாச்சியார், தேவதாசி முறையை ஒழித்த ராமாமிர்தம் அம்மையார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

அஞ்சலை அம்மாள், அசலாம்பிகை அம்மையார், பெரியாரின் சகோதரி கண்ணம்மையார், மனைவி நாகம்மையார், கே.கே.எஸ். காளியம்மாள், எஸ்.என்.சுந்தராம்பாள், பாரதியாரின் மனைவி செல்லம்மா, பத்ம ஸ்ரீ அம்புஜம்மாள், அப்போதே தலித் மக்கள், பெண்கள் விடுதலைக்காக போராடிய அன்னை மீனாம்பாள், பிராமணக் குடும்பத்தில் பிறந்தாலும் சாஸ்திரம், சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகளை தூக்கியெறிந்துவிட்டு ‘பாப் கட்டிங’ வெட்டி, கதர் சட்டை, தோளில் துண்டு என வலம் வந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய மணலூர் மணியம்மா என வெளியுலகுக்கு தெரியாத எத்தனையோ சுதந்திரப் போராட்ட வீராங்கனைகள் இந்திய விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடி உயிர் தியாகம் செய்துள்ளனர்.

இந்திய வீராங்கனைகளின் போராட்டத்துக்கு இணையாக, அன்னி பெசன்ட் அம்மையாரும் போராடி உயிர் தியாகம் செய்துள்ளார்.

இந்த 62வது சுதந்திர தின நன்னாளில் நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள், வீர பெண்மணிகள் அனைவரையும் நினைவு கூறுவோம்.

சுதந்திரத் தின வாழ்த்துக்கள்!