சுதந்திரமாக கொண்டாடுகிறோமா சுதந்திர தினத்தை!

புதன், 13 ஆகஸ்ட் 2008 (17:45 IST)
சுதந்திர தினம்... இந்த வார்‌த்தை மனிதனின் மனதில் ஒருவித மகிழ்ச்சியை, சுதந்திர உணர்வை ஏற்படுத்தும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. அதுவும் வெள்ளையர் ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்று 61 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் சுதந்திர தினம் வரலாற்று நினைவுகளை கொண்டு வந்து பெருமைப்பட வைக்க வேண்டும்.

ஆனால் இன்றைய சூழ்நிலை இந்திய மக்கள் சுதந்திர தினத்தன்று, சுதந்திரமாக நடமாட (பிற நாட்களைப் போல்) முடியுமா என்று நினைத்துப் பாருங்கள், அதில் பெருமையான விஷயம் எதுவும் இருக்காது. காரணம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தான் நாம் சுதந்திரம் பெற்றதை ஆண்டுதோறும் நினைவு கொள்ள வேண்டியுள்ளது.

சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கு சுதந்திர, குடியரசு தினக் கொண்டாட்டங்கள் ஆரோக்கியமான வாய்ப்பை ஏற்படுத்தினாலும், அன்றைய தினத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு கெடுபிடிகளும் அவர்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிடும் என்பதில் ஐயமில்லை.

ஆகஸ்ட் 15... இந்தத் தேதி நெருங்கும் சமயம் நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் தவறாமல் ஒரு தலைப்பு கடந்த சில ஆண்டுகளாக இடம்பிடித்து வருகிறது. “சுதந்திர தினத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாட” என்பது தான் அது.

இதே தலைப்பு அடுத்தாண்டு சுதந்திர தினத்திற்கு முன்பும் இடம்பெறும் என்பது இப்போதே நிச்சயமாகி விட்டதை சமீபத்திய பெங்களூரு, அகமதாபாத் நகரத்தை குலுக்கிய தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் உள்ளூர உணர்த்துகின்றன.

உலகளவில் அதிக மக்கள் தொகையை கொண்ட நாடுகள் பட்டியலில் 2ம் இடம் பிடித்துள்ள இந்தியா, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலிலும் விரைவில் அதே 2ம் இடத்தை பிடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றே மனதில் அச்சம் தோன்றுகிறது.

நூறு கோடி மக்கள் வாழும் இந்நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வளவு சிறப்பாக செய்யப்பட்டாலும், ஆங்காங்கே சில கசப்பான சம்பவங்கள் நிகழத்தான் செய்கின்றன. ஏன் உலகில் வேறு எந்த நாட்டிலும் பயங்கரவாத இல்லையா, குண்டு வெடிப்புகள் நிகழாமல் இருக்கிறாதா என்று கேட்கலாம்?

உலகளவில் பயங்கவராதமும், தீவிரவாதமும் தங்களின் கொடூரக் கரங்களால் உலகை அழுத்திக் கொண்டிருந்தாலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதன் தாக்கம் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த நிலை ஏற்படுத்துவதற்கு அரசியல்வாதிகள் தான் காரணம் என்று ஒரு தரப்பினரும், காவல்துறை, உளவுத்துறையின் மெத்தனம் தான் என்று மற்றொரு தரப்பினரும் தங்களுக்கு மனதிற்கு தோன்றியதை குற்றச்சாட்டுகளாக அடுக்குகின்றனர். ஆனால் உண்மை நிலைதான் என்ன...

நூறு கோடிக்கும் அதிகமான மக்களை கொண்ட நம் நாட்டில் ஒவ்வொருவருக்கும் சமூகப் பாதுகாப்பில் பங்கு கொள்ள வேண்டும் என்பதை எத்தனை பேர் மனதளவில் உணர்ந்துள்ளோம். பக்கத்து வீட்டிற்கு புதிதாக குடியேறுபவர்கள் குறித்த தகவல்களைக் தெரிந்து கொள்வதில் கூட நாம் முனைப்புக் காட்டுவதில்லை.

இப்படி சுற்றத்தார், அண்டை வீட்டுக்காரர் பற்றிய விழிப்புணர்வே இல்லாத பொதுமக்களாகிய நாம், நாடு முழுவதும் உள்ள தகவல்களை தீவிரமாக திரட்டி தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம்?

காவல்துறையும், உளவுத்துறையும் தன் கடமையைச் செய்யத் தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சியை நோக்கி விரல் நீட்டுவதைப் போல் நாமும் அரசியல்வாதிகளை குற்றம்சாட்டிவிட்டு, ஆகஸ்ட் 16 முதல் மீண்டும் வேலை, வீடு, சினிமா, சுற்றுலா என குறுகிய வட்டத்திற்குள் சென்று விடுகிறோம்.

பயங்கரவாதத்தின் தீ ஜுவாலைகள் நம் குடும்பத்தினரை சுடும் போதுதான் அதன் வேதனையை உணர்கிறோம். ஆனால் ஜம்முவில் தீவிரவாதிகள், ராணுவத்தினர் மத்தியில் ஒவ்வொரு தினத்தையும் மரண பீதியுடன் களிப்பவர்களைப் பற்றி நம்மில் பலருக்கு கவலையில்லை.

மாறாக இந்த சுதந்திர தினத்தில் இருந்து தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் நம்மால் முடிந்த உதவிகளை செய்ய முன்வரலாமே. அதற்காக பார்க்கும் வேலையை விட்டுவிட்டு துப்பறியும் நிபுணர்களாக மாறுங்கள் என்று கூறவில்லை, அன்றாடப் பணிக்கு இடையே சுற்றுப்புறம் பற்றிய விழிப்புணர்வையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

சென்னை போன்ற வளர்ந்து வரும் நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருப்பவர்கள் தங்கள் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் யார் என்பதைப் பற்றிக் கூட தெரிந்து கொள்ளாமல் பல மாதங்களாக/ஆண்டுகளாக வசிக்கின்றனர். இதுபோன்ற “சுதந்திரமான சூழல” தான் பயங்கரவாதிகளுக்கு அசுர பலத்தை அளிக்கிறது.

தங்களை கண்காணிக்க யாரும் இல்லை என்ற தைரியம் பிறந்த பின்னர் அவர்கள் மக்களோடு மக்களாக கலந்து தீவிரவாதத்திற்கான சதித்திட்டங்களை தீட்டுகின்றனர். அது உங்களுக்கு அடுத்துள்ள வீட்டிலேயே நடந்தாலும் நடக்கலாம்.

இதனை எந்த காவல்துறையோ, உளவுத்துறையோ கண்டுபிடிக்க முடியாது என்பதே உண்மை. காரணம் அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே... அவர்களுக்கென்று அமானுஷ்ய சக்திகள் எதுவும் இல்லை என்பதை பொதுமக்களும் உணர வேண்டும்.

எனவே, மக்களுடன் மக்களாகக் கலந்து, நாட்டுக்கு எதிராக தீவிரவாதத் திட்டங்களைத் தீட்டுபவர்களை நாம் கண்காணிக்கத் துவங்கினால் தீவிரவாதிகளின் எண்ணிக்கையும், பயங்கரவாத நடவடிக்கைகளின் தாக்கமும் குறையும்.

தக்க சமயத்தில் நீங்கள் கொடுக்கும் ஒரு உன்னதமான துப்புத்தகவல், பல உயிர்களைக் காத்த புண்ணியத்தை உங்களுக்கு வழங்கும் என்பதையும் நினைவு கொண்டால், உளவுப்பணி கூட கோயில் திருப்பணியாக உங்கள் மனதில் தோன்றும்.

வெப்துனியாவைப் படிக்கவும்