``இந்த வந்துட்டேங்க -'' என்றவாறே சிந்தனையைக் கலைத்து விட்டு பாலு அன்றைய வாடிக்கையாளர்களின் சாமான்களுக்கு கம்ப்யூட்டர் பில்லைப் போட எத்தனித்தான்.
ஆம். ஊரில் அப்படித்தான் அவன், சொல்லி வைத்திருந்தான். கணினி முன்தான் தனக்கு வேலை என்றும், தனக்காக 1 முதல் 10ஆம் தேதி வரை நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் காத்திருப்பார்கள் என்று.
webdunia photo
WD
ஓஹோ, அப்படியா ராசா - என்றவாறு, மூக்கில் விரலை வைத்து தனது தாய், கேட்பதை பார்த்திருக்கிறான் பாலு.
என்ன செய்வது, பி.எஸ்சி. கணினி அறிவியலில், பட்டத்தைப் பெறுவதற்கு இந்த ஆங்கிலம் - அந்நிய மொழியில் மட்டும் தேற வேண்டியுள்ளதே.
முதலாமாண்டில் ஃபெயில் ஆனது, பட்டப்படிப்பு 3 ஆண்டு முடித்து வெளியே வந்ததும், தாயைக் காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பில், எப்படியும் வேலைபார்த்துக் கொண்டே அந்த பேப்பரை எழுதி பாஸ் செய்து விடலாம் என்ற நினைப்பில், ஊரில் வீட்டிற்கு அருகேயிருந்த நண்பர் மூலமாகக் கிடைத்த மளிகைக் கடை வேலையில் சேர்ந்து கொண்டான்.
தங்குவதற்கு இடம், சாப்பாடு போட்டு ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கிறதே, இந்தப் பணத்தையாவது வீட்டிற்கு அப்படியே அனுப்பலாம் என்றெண்ணிய பாலு, சென்னைப் பட்டணம் வந்து ஓராண்டு ஓடி விட்டது.
வாரத்திற்கு ஒருநாள் அண்ணாச்சி சினிமாவிற்காக தரும் 50 ரூபாயை பாலு, பிரவுசிங் சென்டருக்குப் போய் வேலைக்குப் பதிவு செய்வதை வாடிக்கையாக்கிக் கொண்டான்.
எப்படியும், இங்கிலீஷ் பேப்பர் (அரியர்) ரிசல்ட் ஓரிரு மாதத்தில் வந்துவிடும், அப்போது பார்த்துக் கொள்ளலாம், தனி மனிதனுக்கு சிந்திக்கக் கூட சுதந்திரம் அளிக்க விரும்பாத, இந்த அண்ணாச்சியை என்று மனதில் நினைத்துக் கொண்டே அன்றிரவு தூங்கிப் போனான்.
அடுத்த நாள் ஊரில் இருந்து போன்.
``ஹலோ, மினி டெமரிஸ்-ங்களா, மூலக்கரைப்பட்டில இருந்து பேசறோம். பாலுகிட்ட குடுங்க அண்ணாச்சி''.
``எல, இந்தா பாலு, வேலைக்கு வந்தவுடனே போன், இந்தால பேசு. ஊரில இருந்து பேசறாக '' - அண்ணாச்சி.
webdunia photo
WD
ரிஸிவரை வாங்கிப் பேசிய பின் போனை வைத்தவன் முகத்தில் பேயறைந்தது போல் இருந்தது.
``எல, என்னா, எதாவது சொல்லு'' - அண்ணாச்சி.
`இல்ல, அண்ணாச்சி, அம்மாவ ஆஸ்பத்திரிலே சேர்த்திருக்காகளாம் - நான் உடனே போகணும்''
``சரில, அதுக்கென்ன, இந்தா பணத்தைப் பிடி'' என்று கூறி ஐயாயிரம் ரூபாயை பாலுவிடம் கொடுத்து, ``போய்ட்டு வா,'' என்றார்.
ஊரில் இறங்கும்போதே, நண்பன் ரமேஷ் சொன்னான், ``ஒண்ணுமில்லையாம்பா, லேசா பி.பி. குறைஞ்சுடுச்சாம். நேற்றே வீட்டிற்கு போகச் சொல்லிட்டார்பா''.
கண்களில் குளமாக, பாலு யோசித்தான். நாம் மட்டும் கார்ப்பரேட் அலுவலகத்தில் பெரிய வேலை பார்த்து கைநிறைய சம்பாதித்தால், ஹெல்த் இன்ஷூரன்ஸ் மூலமாவது, தாயாருக்கு நல்ல மருத்துவமனையில் சிகிச்சை பார்க்கலாமே என்றெண்ணியபடி தாயாரைப் பார்த்து பேசினான்.
முடிவோடு சென்னை திரும்பினான். அவனது முடிவை ஆதரிப்பது போல், ஏற்கனவே ஒருமுறை எழுதி ஃபெயில் ஆன இங்கிலீஷ் பேப்பர் 2 முறையாக எழுதிய நிலையில், ரிசல்ட் பாஸ் என தகவல் வந்தது. மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தான் பாலு.
பூரிப்புடன், நெட்டில் பதிவு செய்து விட்டு, மளிகைக் கடைக்குச் சென்றான்.
``சரில, அம்மாக்கு குணமாயிடுச்சில்லா. வேலையைப் பார்லே, மாசத்திலே முதல் தேதியும் அதுவுமா, நீ ஊருக்குப் போயிட்ட, ஏகப்பட்ட பிரச்சினை, பில் மெஷின் வேற கோளாறு பண்ணிட்டு. இங்கே ஒருபயலுவளுக்கும் கம்ப்பயூட்டர் தெரியல. இப்போதான் சரியாயிருக்கு, பாத்துப் பில் போடுலே சரியா" - அண்ணாச்சி அவர் கவலையை கொட்டினார்.
``என்ன செய்வது, கார்ப்பரேட் கலாச்சாரத்திற்கு மாறும் வரை இவரிடம் தான் இருந்தாகணும் '' - முணுமுணுத்த படியே கடுகு, சீரகம், ரின் சோப் என பில் போடத் தொடங்கினான் பாலு.
அடுத்த வாரம் சினிமா காசில் வலைத்தளத்தில் நுழைந்தபோது... ஆனந்த அதிர்ச்சி போல, பாலுவுக்கு புதிய வேலை கிடைத்ததற்கான மின்னஞ்சல்.
ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதிபரிவர்த்தனை செய்யும் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல கிளைகளைக் கொண்ட ஐ.டி. நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் 4 இலக்க எண்ணில் சம்பளம். ஆள் நடை, உடை பாவனையே மாறி விட்டான்.
சந்தோஷக் கனவுகள், தாயாருக்கு நல்ல ட்ரீட்மென்ட், நல்ல இடத்தில் வரன் வந்தாலும், மாமன் மகள் கல்யாணியை மணம் முடித்து தாயின் கனவை நிறைவேற்றுவது என எண்ணற்ற திட்டங்களுடன் பணியில் சேர்ந்தான்.
``ஓ.கே. இப்போ நாம இந்த வேலையை 10 நாட்களுக்குள் முடித்து அனுப்பி விடணும்'' - மற்றொரு அண்ணாச்சி போல பி.எம். (புராஜெக்ட் மேனேஜர்) உத்தரவிட்டார்.
வீட்டில் தொடர்பு கொண்டு பேசுவதற்கு அம்மாக்கு ஒரு நல்ல செல்போன் வாங்கிக் கொடுத்துட்டு வரணும் - நினைத்துக் கொண்டே பி.எம்-ன் கூற்றுக்கு தலையாட்டிய பாலு, மறுநாள் பணியைத் தொடங்கினான்.
செல்போனில் லேட்டஸ்ட் தமிழ்ப்பட பாடல் மணியாக ஒலித்தது. மூலக்கரைப் பட்டியில் இருந்து பூத் நம்பர், ``யாராக இருக்கும், ரமேஷ் நம்பர்ல அம்மாட்ட நேத்துதானே பேசினேன்'' குழப்பத்துடனேயே போனை எடுத்தான்.
ரமேஷ்தான் பேசினான், ``டேய் உடனே கிளம்பி வாடா''
`என்னடா, ஏதாவது பிரச்னையா. நான் இந்தக் கம்பெனிலே சேர்ந்தே 2 நாள்தாண்டா ஆகுது. எப்படிட உடனே வர முடியும்?'
`அதெல்லாம் கிடக்கட்டும், புறப்பட்டு வாடா' - ரமேஷ்
``அப்படி என்னடா, சொல்லு''
``அம்மாவுக்கு சீரியஸ்டா''
வேகமாக ரயில், பஸ்னு கிடைச்சதை பிடித்துப் போய் அடுத்த நாள், காலைல ஊரில் இறங்கும் போதே இவனது வரவுக்காக அனைவரும் காத்திருப்பது தெரிஞ்சுது.
மாமா, ஏன் இங்கே வந்துள்ளார். ``என்ன, மாமா என்ன நடந்துச்சு, சொல்லுங்க. அம்மா, இப்போ......''
ஊரே வீட்டில் கூடியிருக்க, பாலு கண்ட காட்சி. அய்யோ, என்னவெல்லாம், கனவில் இருந்தேன்.
ஆம், அந்த தாய் உயிர் நீத்து ஒருநாள் ஆகியிருந்தது.
கார்ப்பரேட் பணம், சிகிச்சைக்கு பலனில்லாமல் போயிற்று.