புலித்தேவர்: வீரமும், தீரமும் நிறைந்த புலித்தேவரைக் கண்டு ஆங்கிலேயர்கள் மிரண்டனர். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை தமிழகத்தில் இருந்து முதலில் எதிர்த்தவர் என்ற சிறப்பு பெற்றவர் புலித்தேவர். இவர் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நெற்கட்டுச் செவ்வல் என்ற பாளையத்தில் ஆதிக்கம் செய்து வந்தார். இந்திய விடுதலை வரலாற்றில் 'வெள்ளையனே வெளியேறு' என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க் கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
1755ஆம் ஆண்டு கர்னல் எரோன் தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வரி வசூலிக்கும் உரிமை ஆங்கிலேயர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு ஆங்கிலேயர்களை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டுச் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதேபோல் திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார். 1760ஆம் ஆண்டு யூசுப்கான் நெற்கட்டுச் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு கேப்டன் பெளட்சன் வாசுதேவநல்லூர் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். உயர் அதிகாரத்திற்கு எதிராக போராடிய வீரனுக்கு உதாரணமாக புலித்தேவரின் வாழ்க்கையும், போராட்டமும் சிறப்புற அமைந்துள்ளது.
வீரபாண்டிய கட்டபொம்மன்: பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தை ஆட்சி செய்து வந்த வீரபாண்டிய கட்டபொம்மனும் புலித்தேவர் போலவே ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்த மறுத்து வந்தார். ஆங்கிலேயரின் வரி வசூல் கொள்கையே ஆங்கிலேயருக்கும், கட்டபொம்மனுக்கும் இடையே விரோதம் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்தது.