கேட்டதை அருளும் பரமேஸ்வரர் பல திருத்தலங்களில் லிங்க ரூபமாக அருள் பாலிக்கிறார். ஆண்டுதோறும் சிவபெருமானுக்கு பல சிறப்பு பூஜைகளும், திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் மகாசிவராத்திரிக்கு பிறகு வரும் சூரியபூஜை சிறப்பு வாய்ந்தது.
இந்த சூரிய பூஜை பங்குனி மாதத்தில் அரிதாக சில சிவ ஸ்தலங்களில் மட்டுமே நடைபெறுகிறது. திருவையாறு அருகே உள்ள திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோவிலில் பங்குனி 13, 14, மற்றும் 15 ஆகிய தேதிகளில் சூரியக்கதிர்கள் சிவலிங்கத்தின் மீது நேரடியாக விழும்.
தஞ்சை அருகே உள்ள திருப்பரிதி நியமத்தில் அருள்பாலிக்கும் பரிதியப்பர் சுயம்பு மூர்த்திக்கு பங்குனி மாதம் 17, 18, மற்றும் 19 ஆகிய நாட்களில் சூரிய பூஜை நடத்தப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் சேலம் தாரமங்களத்தில் உள்ள கயிலாச நாதர் திருக்கோவில், கும்பகோணம் சாலையில் உள்ள திங்களூர் கயிலாசநாதர் சமேத பெரியநாயகி திருக்கோவில், திருச்சி தாயுமான சுவாமி திருக்கோவில், சேறை செந்நெறியப்பர், கண்டியூர் வீரட்டேஸ்வரர், திருவாடுதுறை மாசிலாமணி ஈஸ்வரர் ஆகியோரையும் சூரிய பகவான் தனது திருக்கரங்களால் வழிபடுகிறார்.