பங்குனி மாத பூஜை.. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு..!

Mahendran

சனி, 15 மார்ச் 2025 (18:13 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறந்தது.
 
தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, தீபாராதனை நடத்தினார். பங்குனி மாத பூஜையை முன்னிட்டு, நாளை முதல் மார்ச் 19 வரை கோவிலில் தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறவிருக்கின்றன. மார்ச் 19ஆம் தேதி இரவு, அத்தாழ பூஜை முடிந்தவுடன் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
 
இம்முறை, பங்குனி மாத பூஜைக்காக பக்தர்கள் 18-ம் படியை ஏறி, கொடி மரத்திலிருந்து நேராக கோவிலுக்குள் சென்று ஐயப்பன் தரிசனம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், மேம்பாலம் வழியாகச் செல்லும் அவசியம் இல்லாமல், நேரடி தரிசனம் பெறும் நேரம் மிச்சமாகும் என திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் கூறுகையில், "பக்தர்கள் ஐயப்பனை நீண்ட நேரம் தரிசிக்க வாய்ப்பு பெறுவார்கள். இதுவரை, 80% பக்தர்களுக்கே முழுமையான தரிசனம் கிடைத்தது. இந்த மாற்றத்தால், அனைவருக்கும் முழுமையான ஐயப்பன் தரிசனம் உறுதி செய்யப்படும்" என்றார்.
 
பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு, ஏப்ரல் 1ஆம் தேதி மாலை நடை மீண்டும் திறக்கப்படும். ஏப்ரல் 2ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் விழா ஆரம்பமாகி, ஏப்ரல் 11ஆம் தேதி ஆராட்டுடன் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்