ருத்ராட்சத்தை எப்படி அணிய வேண்டும் அறிந்துகொள்வோம்1
ஞாயிறு, 18 ஜூலை 2021 (00:35 IST)
சூரியன், சந்திரன், அக்னி இவை மூன்றும் சிவபெருமானின் முக்கண்கள். ஈசன் தவத்தில் இருந்தபோது அவன் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரே ருத்ராட்ச மரமாக தோன்றியது. சிப்பிக்குள் முத்தாக தோன்றும் மழைதுளியை போல, சிவபெருமானின் முத்து முத்தான கண்ணீரால் தோன்றியதே ருத்ராட்சம்.
ருத்ராட்சத்தை அணிபவர்கள் ருத்ரனின் அம்சம். ருத்ராட்சத்தை அணிந்தவர்களின் கண்களில் துன்ப கண்ணீர் வருவதில்லை. ஆபத்துகளில் இருந்து நம்மை தடுத்து காப்பதால் இறைவனை நினைத்து நம் கண்களில் வருவது ஆனந்த கண்ணீர்தான். துன்பம் தூர ஒடி விடும்.
ருத்ராட்சத்தை சிகப்பு கயிற்றில் கட்டி கழுத்தில் அணியலாம். அல்லது தங்க சங்கிலியிலும் – வெள்ளி சங்கிலியிலும் கழுத்தில் அணியலாம். ஆனால் கறுப்பு கயிற்றில் கட்டக் கூடாது
ருத்ராட்சத்தின் மேல் பக்க முகம் பிரம்மா. கீழ்ப்புறம் விஷ்ணு. நடுப்பகுதி ருத்திரன் என்கிறது சாஸ்திரம். அதனால் ருத்ராட்சம் அணிந்தால் முப்பெரும் தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும்.
ருத்ராட்சத்தை நன்றாக கவனித்து தரம் உள்ளதாக பார்த்து வாங்க வேண்டும். முள் இல்லாதவையாக இருக்க வேண்டும். பூச்சி அரித்தவையாக இருக்கக் கூடாது. பிளவும் இருக்கக் கூடாது
முதன் முறையாக ருத்ராட்சம் அணிபவர்கள், சிவபெருமானின் பாதத்தில் வைத்து ஆசி பெற்று அணிந்தால் நன்மை. ருத்ராட்சம் அணிந்து பூஜை செய்தால் இன்னும் கைமேல் பலன் கிடைக்கும்.
நெல்லிகாய் அளவு கொண்ட ருத்ராட்சம் மிகவும் உயர்ந்த பலனை தரும். இலந்தை பழ அளவு ருத்ராட்சம் மத்திமம். கடலை அளவுள்ள ருத்ராட்சம் அதமம்.
ருத்ராட்சத்தால் சிவலிங்கத்தை அலங்கரித்தால், அவர்களுக்கு பல நன்மைகள் ஏற்படும். ஸ்ரீலஷ்மி கடாக்ஷம் கிட்டும். பித்ருதோஷம் நீங்கும். தலைமுறை தலைமுறைக்கு இன்னல் இல்லா வாழ்க்கை அமையும்.
சிவன் தந்த ருத்ராட்சத்தை அணிபவர்கள் ருத்ர சொரூபமாகவே மாறி விடுகிறார்கள். வேலனுக்கு வேலாயுதம் போல, எந்த ஆபத்தான சமயத்திலும் நம்மை காக்கும்.
ருத்ராட்சத்தை அணிந்து ருத்ர அம்சமாக இருப்பவர்களின் அருகில் எந்த தீய சக்தியும் நெருங்காது. சூரியனை கண்டு இருள் விலகுவதை போல, ருத்ராட்சத்தை கண்டு துஷ்ட சக்திகள் விலகுகிறது.