நாளை வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: பூஜை முறைகள் மற்றும் 21 இலைகளின் பலன்கள்!

Mahendran

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025 (18:15 IST)
விநாயகர் சதுர்த்தி விழா, ஒவ்வொரு ஆண்டும் வீடுகளில் அவரவர் விருப்பத்திற்கேற்ப உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது, சிறிய மண் பிள்ளையார் சிலை வாங்கி வந்து, அதற்கென ஒரு மண்டபத்தை அமைத்து, வாழைக்கன்று, மாவிலை, மலர்களால் அலங்கரிப்பது வழக்கம்.
 
அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில், மண் பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் இட்டு, எருக்கம்பூ மாலை, அருகம்புல் மாலை போன்றவற்றை அணிவிப்பார்கள். விநாயகருக்கு மிகவும் விருப்பமான அருகம்புல், வன்னி பத்திரம், போன்ற இலைகளை கொண்டு அர்ச்சனை செய்வது, நிறைந்த பலன்களை தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது மிகவும் சிறப்பானது. இந்த இலைகளால் அர்ச்சனை செய்தால் கிடைக்கும் பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
 
21 இலைகளின் பலன்கள்:
 
முல்லை: அறம் செழிக்க.
 
கரிசலாங்கண்ணி: இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் கிடைக்க.
 
வில்வம்: இன்பம், விரும்பிய அனைத்தும் கிடைக்க.
 
அருகம்புல்: அனைத்துப் பாக்கியங்களும் பெற.
 
இலந்தை: கல்விச் செல்வம் பெருக.
 
ஊமத்தை: பெருந்தன்மை வளர.
 
வன்னி: இவ்வுலகிலும், சொர்க்கத்திலும் நன்மைகள் உண்டாக.
 
நாயுருவி: முகப்பொலிவும், அழகும் பெற.
 
கண்டங்கத்திரி: வீரம் செழிக்க.
 
அரளி: வெற்றிகள் குவிய.
 
எருக்கம்: கருவில் உள்ள சிசுவுக்குப் பாதுகாப்பு கிடைக்க.
 
மருதம்: குழந்தை பாக்கியம் பெற.
 
விஷ்ணுக்ராந்தி: நுண்ணறிவு வளர.
 
மாதுளை: பெரும்புகழ் உண்டாக.
 
தேவதாரு: எதையும் தாங்கும் இதயம் பெற.
 
மருவு: இல்லற சுகம் நிலைக்க.
 
அரசு: உயர் பதவி, மதிப்பு கிடைக்க.
 
ஜாதி மல்லிகை: சொந்த வீடு, பூமி பாக்கியம் உண்டாக.
 
தாழம் இலை: செல்வச் செழிப்பு பெருக.
 
அகத்திக் கீரை: கடன் தொல்லையில் இருந்து விடுதலை பெற.
 
தவனம்: நல்ல கணவன்-மனைவி அமைய.
 
இந்த 21 இலைகளைத் தவிர, நெல்லி, மருக்கொழுந்து, நொச்சி, மாவிலை, துளசி, பாசிப்பச்சை ஆகிய இலைகளைக் கொண்டும் விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் பெரும் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்