ரிஷிகளில் நான் வியாசராக இருக்கிறேன் என்கிறார் கீதையில் பகவான் கிருஷ்ணர். வியாசரை வேத வியாசர் என்று அழைப்பதுண்டு. காரணம், அவர் வேதங்களைத் தொகுத்ததாலும் ஐந்தாம் வேதம் எனப்படும் மகாபாரதம் எழுதியதாலும் ஆகும். அது மட்டுமன்றி பல புராணங்களையும் பிரம்ம சூத்திரமும், ஸ்ரீமத் பாகவதமும் வியாசரால் அருளப்பட்டவையே.
ஆஷாட பௌர்ணமி வியாச பௌர்ணமி என்று போற்றப்படுகிறது. எனவே வியாச பௌர்ணமி தொடங்கிய நாளிலிருந்து அடுத்த நான்கு மாதங்கள் மழைக்காலமாகும். இந்தக் காலகட்டத்தில் பல்வேறு ஜீவராசிகளும் இடம் பெயர்ந்து வாழுமாம். எனவே, இந்தக் காலகட்டத்தில் சந்நியாசிகள் அவற்றுக்குத் தொந்தரவு ஏற்படா வண்ணம் ஒரே இடத்தில் தங்கியிருப்பார்கள்.
இந்தக் காலகட்டத்தில் அவர்கள் பூஜைகள், மந்திர ஜபங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவார்கள். இந்தக் காலகட்டத்தில் செய்யும் மந்திர ஜபங்கள், தனக்கு மட்டுமன்றி உலகம் முழுமைக்கும் பன்மடங்கு பலன் தரக்கூடியவை. இந்தக் காலகட்டம் தேவர்களும் பகவான் விஷ்ணுவும் யோகநித்திரையில் இருக்கும் காலம் என்கிறார்கள். எனவே, இந்தக் காலகட்டத்தில் செய்யும் இறைவழிபாடு மிகவும் பலன் தரக்கூடியது.
அவரவர்களின் இஷ்ட தெய்வ நாமத்தை உச்சரிக்கலாம். குறிப்பாக, நீங்கள் வழிபடும் மகானை நினைத்து அவர் படத்துக்குத் தினமும் ஒரு மலராவது சாத்தி வணங்குவது சிறப்பானது. நம் வாழ்வில் இருக்கும் பல பிரச்னைகள் தீர்க்க இந்தக் காலகட்டத்தில் செய்யும் இத்தகைய வழிபாடுகள் பயன் அளிக்கும்.