தசாவதாரத்தில் தனிச்சிறப்பு மிக்க அவதாரம் வாமன அவதாரம். முழு மனித வடிவில் பகவான் எடுத்த முதல் அவதாரம் இது. குள்ள உருவில் பிரம்மச்சாரியாகத் தோன்றி, தோன்றிய நாளிலேயே வேதங்கள் அனைத்தும் பயின்று மகாபலியின் யாகசாலைக்குச் சென்றார் என்கிறது புராணம். மேலும் இந்த அவதாரத்தில் அவர் மகாபலியை சம்ஹாரம் செய்யவில்லை. மாறாக பாதாள லோகத்துக்கே அனுப்பினார் என்பது சிறப்பு.
திருவடியின் மகிமையைச் சொல்வது இந்த அவதாரம். பகவான் ஓங்கி உலகளந்தபோது அவரின் இடுப்பு ஸ்வர்க்க லோகத்திலும் வயிறு மஹர்லோகத்திலும் மார்பு ஜனலோகத்திலும் கழுத்து தபோலோகத்திலும் தலை சத்ய லோகத்திலும் இருந்தன என்கிறது புராணம். அத்தகைய மாபெரும் உருவெடுத்த அந்தப் பெருமாளின் திருவடிவே உலகளந்த பெருமாளாக ஆலயங்கள் தோறும் வணங்கப்படுகின்றன.