வெள்ளிக்கிழமையில் விரதம் இருப்பதால் என்ன நன்மைகள் தெரியுமா...?
வெள்ளி, 15 ஜூலை 2022 (14:15 IST)
வெள்ளிக் கிழமையில் விரதம் இருந்து வந்தால், லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூன்று பேரின் அருளைப் பெறலாம்.
இந்த விரதத்தை ஏதாவது ஒரு மாதத்தில் வருகின்ற 3-வது வெள்ளிக்கிழமை அல்லது கடைசி வெள்ளிக்கிழமையில் தொடங்கி, 11 வாரம் மட்டும் அனுஷ்டிக்க வேண்டும். வயதைப் பொறுத்து ஆயுள் முழுவதும் கூட இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம்.
வெள்ளிக் கிழமை விரதம் இருக்க நினைப்பவர்கள், முதலில் ஏதாவது ஒரு மாதத்தில் வரும் மூன்றாவது அல்லது கடைசி வெள்ளிக்கிழமையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அதிகாலை எழுந்து வீட்டை சுத்தப்படுத்தி, கோலம் போட்டு சுத்தமாக வைக்க வேண்டும்.
வீட்டை சுத்தம் செய்ததும், விரதம் இருப்பவர்களும் நீராடிவிட்டு வந்து வீடு முழுவதும் சாம்பிராணி புகை போட்டு தெய்வீக மணம் கமழச் செய்ய வேண்டும். பிறகு லட்சுமிதேவியின் படத்திற்கோ அல்லது விக்கிரகத்திற்கோ மலர்களால் அர்ச்சனை செய்வதுடன், தீபாராதனைக் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.
அன்றைய தினம் முழுவதும் லட்சுமி தேவியைப் பற்றிய பக்திப் பாடல்களையோ, முருகப்பெருமான், சுக்ரனைப் பற்றிய பக்திப் பாடல்களையோ பாராயணம் செய்தபடி இருப்பது சிறப்பான நன்மையை வழங்கும்.
ஒரு நாள் முழுவதுமாக உபவாசம் இருக்க முடியாதவர்கள், பால், பழம் போன்றவற்றை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். விரத நாள் முடிந்ததும் சுவாமியின் படத்திற்கு சிறப்பு பூஜை செய்து விரத்தை முடித்துக் கொள்ளலாம்.
தொடர்ந்து 11 வாரங்கள் வெள்ளிக் கிழமையில் விரதம் இருந்து வந்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். பகீரதன் என்னும் மன்னன் இந்த விரதத்தை கடைப்பிடித்து தான், இழந்து போன தனது அரசுரிமையை திரும்பப் பெற்றான்.