பார்கின்சன்ஸ் நோயாளிகளுக்கான மேம்பட்ட கிளினிக்-ஐத் தொடங்கும் ரேலா மருத்துவமனை!

புதன், 10 ஏப்ரல் 2024 (21:46 IST)
பார்கின்சன்ஸ் நோயாளிகளுக்கான இயக்கக் கோளாறுகளுக்கும் DBS பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண மேம்பட்ட கிளினிக்-ஐத் தொடங்கும் ரேலா மருத்துவமனை


 
●         பார்கின்சன்ஸ் நோயாளிகளுக்கும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒரு சிறப்பு யோகா அமர்வை நடத்துகிறது

●         2024, ஏப்ரல் 30-ம் தேதிவரை பார்கின்சன்ஸ் நோயாளிகளுக்கு இலவச கலந்தாலோசனை  சேவை வழங்கப்படுவதை அறிவிக்கிறது

சென்னை, ஏப்ரல் 10, 2024: இம்மாநகரில் ஒரு முன்னணி பன்னோக்கு மருத்துவமனையாக புகழ்பெற்றிருக்கும் ரேலா மருத்துவமனை பார்கின்சன்ஸ் நோயாளிகளின் DBS (ஆழமான மூளைத்தூண்டல்) பிரச்சனைகளை சரிசெய்ய ஒரு மேம்பட்ட கிளினிக்-ஐ தொடங்கியிருக்கிறது. இந்த கிளினிக், தேவைப்படுபவர்களுக்கு மதிப்பாய்வு செய்து DBS, பொடூலினம் டாக்ஸின் மற்றும் அபோமார்ஃபைன் தெரபிக்குப் பிறகு உகந்த பலனளிக்கும் இமேஜ் வழிகாட்டல் புரோகிராமிங் போன்ற மேம்பட்ட பராமரிப்பை வழங்கும்.

இந்த கிளினிக் தொடக்கவிழா நிகழ்வில் ரேலா மருத்துவமனையின் தலைவர் & நிர்வாக இயக்குநர் புரொபசர். முகமது ரேலா தலைமை வகிக்க கவுரவ விருந்தினராக சத்யானந்த யோகா சென்டரின் நிறுவனர் திரு. சன்னியாசி சிவா ரிஷி கலந்து கொண்டார். தாம்பரம் காவல்துறை துணை ஆணையர் திரு. பவன் குமார் ரெட்டி ஐபிஎஸ் மற்றும் நகைச்சுவை நடிகரான திரு. புகழ் ஆகியோர் தலைமை விருந்தினர்களாக இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தொடக்கவிழா நிகழ்வை தொடர்ந்து, ஒரு யோகா அமர்வும் நடைபெற்றது. இயக்க திறன்கள் மற்றும் மூளை நரம்பியல் நிலைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் நிவாரணமளிக்கிற யோகா ஆசன அமர்வில் சுமார் 100 நோயாளிகளும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்றனர். ஆண்டுதோறும் ஏப்ரல் 11-ம் தேதியன்று அனுசரிக்கப்படும் உலக பார்கின்சன்ஸ் தினம் என்ற நிகழ்வையொட்டி பார்கின்சன்ஸ் மற்றும் இயக்கக் கோளாறுகள் கொண்ட நோயாளிகளுக்கு மருத்துவ நிபுணர்களுடன் இலவச கலந்தாலோசனை திட்டத்தை 2024, ஏப்ரல் 30-ம் தேதிவரை வழங்குவதையும் ரேலா மருத்துவமனை அறிவித்திருக்கிறது. அப்பாய்ன்ட்மென்ட்களுக்கு: 044-6666 7777

பார்கின்சன்ஸ் நோய் என்பது நடுக்கம், இறுக்கம், சமநிலை மற்றும் உடல் உறுப்புகளின் ஒத்துழைப்பான செயல்பாட்டில் சிரமம் போன்ற கட்டுப்படுத்த இயலாத அல்லது தன்னிச்சையாக நிகழும் நகர்வுகளை விளைவிக்கும் ஒரு மூளை சீர்கேடாகும். தள முடிச்சுகள் (basal ganglia) என அழைக்கப்படும் மூளையின் ஒரு பகுதியில் உள்ள நரம்பு செல்கள் பாதிப்படையும்போது அல்லது இறக்கும்போது இது நிகழ்கிறது. நமது நடமாட்டத்தையும், நகர்வுகளையும் கட்டுப்படுத்துவதற்கு பொறுப்பானதாக இருப்பது தள முடிச்சுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்கின்சன்ஸ் நோயை முழுமையாக குணமாக்குவதற்கு மருந்துகளோ, சிகிச்சை வழிமுறைகளோ இல்லை என்ற போதிலும் அந்நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய மருந்துகளும், அறுவைசிகிச்சைகளும் இருக்கின்றன. தரப்படும் மருந்துகள் நோயாளிகளுக்கு எதிர்பார்க்கும் பலனை வழங்க இயலாதபோது DBS சாதனங்களை உள்வைக்கும் செயல்பாடு வழக்கமாக பரிந்துரைக்கப்படுகிறது. DBS என்பது மூளைக்கான ஒரு பேஸ்மேக்கர் சாதனம் போன்றது. பேஸ்மேக்கர்கள் மின்சார சிக்னல்களை இதயத்திற்கு அனுப்புகிறபோது, DBS மூளைக்கு சிக்னல்களை அனுப்புகிறது. நோய் பாதிப்பின் அறிகுறிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு இந்த சிக்னல்கள் உதவக்கூடும். நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை இதன் மூலமாக DBS மேம்படுத்துகிறது.  இருப்பினும், DBS தடங்கல்களை உருவாக்கலாம், தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தலாம் அல்லது மேம்படுத்தல் தேவைப்படலாம். சரிப்படுத்துவதற்கான கிளினிக்குகள் ஆழ்ந்த மூளை தூண்டுதலின் பலன்களை அதிகரிக்க உதவும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய புரொபசர். முகமது ரேலா கூறியதாவது, “பார்கின்சன்ஸ் என்பது, வயது முதிர்வு தொடர்புடைய மூளையில் படிப்படியாக வளரக்கூடிய ஒரு சீர்கேடாகும். 60 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள 100 முதியோர்களில் ஒருவரை இந்நோய் பாதிக்கிறது. இந்த பாதிப்பு நிலைக்கு நிரந்தர குணமாக்கல் அல்லது நிவாரணம் இல்லையென்றாலும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், மேம்பட்ட மருத்துவ இடையீட்டு சிகிச்சைகளின் மூலம் இயல்பான

வாழ்க்கையை வாழ முடியும். நடமாட்டம் மற்றும் நகர்வு என்ற பிரத்யேக துறை எமது மருத்துவமனையில் நிறுவப்பட்டிருக்கிறது. சிறப்பு நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு குழு இத்துறையை நிர்வகிக்கிறது. DBS-ன் ஆழமான மூளைத்தூண்டல் சாதனத்தை பொருத்துவது உட்பட இந்நோய்க்கு கிடைக்கக்கூடிய அனைத்து நவீன, மேம்பட்ட சிகிச்சைகளையும் நாங்கள் வழங்குகிறோம். புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் DBS குறைபாடுகளை சரிசெய்யும் கிளினிக் எமது சிகிச்சை பராமரிப்பை மேலும் மேம்படுத்த எங்களுக்கு உதவும். ரேலாவில் வழங்கப்படும் இந்நோய்க்கான சிகிச்சையில் யோக ஆசனங்களையும் நாங்கள் ஒருங்கிணைத்திருக்கிறோம். இந்த அணுகுமுறை எமது நோயாளிகளுக்கு மிகச்சிறப்பான மருத்துவ விளைவுகளை வழங்குகிறது.”

இந்நிகழ்வில் உரையாற்றிய திரு சன்யாசி சிவா ரிஷி, “நாட்பட்ட நோய்கள் மற்றும் வாழ்க்கை முறை சீர்கேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு தரம் வாய்ந்த நிவாரணத்தை உடல்நலம் மீதான ஒரு முழுமையான அணுகுமுறை மட்டுமே தரமுடியும். உடலின் சீர்கேடுகளை சரிசெய்வதுடன் மனநலத்தையும், உணர்வு சார்ந்த நலவாழ்வையும் புதுப்பித்து வலுவாக்குவது இத்தகைய பாதிப்பு நிலைகளுக்கு அவசியமானதாக இருக்கிறது. யோகா ஆசனங்கள், உடலின் நெகிழ்வுத்திறனை அதிகரிக்கின்றன, இறுக்கமான தசைகள் மற்றும் மூட்டுகளை தளர்வாக்குகின்றன, உடலிலுள்ள நச்சுக்கழிவுகளை அகற்றுகின்றன மற்றும் மனதை அமைதிப்படுத்துகின்றன. பார்கின்சன்ஸ் நோய் மற்றும் பிற நரம்பு சிதைவு சீர்கேடுகளின் மேலாண்மைக்கு இத்தகைய ஒருங்கிணைந்த சிகிச்சை அணுகுமுறையை ரேலா மருத்துவமனை பின்பற்றுவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். யோகா ஆசனங்களை தங்களது வாழ்க்கையின் ஒருங்கிணைந்த அம்சமாக ஆக்குவதற்கு நோயாளிகளும் மற்றும் பொதுமக்களும் முன்வர வேண்டும். நமது தேசத்தின் மிகத்தொன்மையான ஞானத்திலிருந்து பயனடைய வேண்டும்” என்று கூறினார்.

ரேலா மருத்துவமனையின் இடையீட்டு நரம்பியல் சிகிச்சை துறையின் கிளினிக்கல் லீடு டாக்டர் சங்கர் பாலகிருஷ்ணன் ஆற்றிய உரையில், பார்கின்சன்ஸ் நோயாளிகளுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சைப் பலன்கள் கிடைப்பதற்கு, தொடக்க நிலையிலேயே நோயறிதல் செய்வதும் மற்றும்  அதன் அடிப்படையில் உரிய சிகிச்சை வழங்குவதும் முக்கியமானவை என்று குறிப்பிட்டார். “பெரும்பாலான நபர்களுக்கு 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதின்போது முதலில் பார்கின்சன்ஸ் பாதிப்பு அறிகுறிகள் உருவாகின்றன என்ற போதிலும் 5% முதல் 10% வரையிலான நபர்களுக்கு 50 வயதுக்கு முன்னதாகவே இந்நோய் வருகிறது. பார்கின்சன்ஸ் நோய் சில நபர்களில் ஒரு பரம்பரை நோயாக இருப்பதும் மற்றும் வேறு சிலருக்கு சுற்றுச்சூழல் காரணமாக இருப்பதும் தெரிய வருகிறது. எனவே இந்நோய் வரக்கூடிய வயது பிரிவிலுள்ள நபர்கள் கீழ்கண்ட 4 முக்கியமான அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பது குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்: 1) கைகள், புஜங்கள், கால்கள், தாடை அல்லது தலையில் நடுக்கம்; 2) தசை இறுக்கம்-நீண்ட நேரமாக தசைகள் சுருங்கிய நிலையில் இருப்பது; 3) மெதுவான இயக்கத்திறன்; 4) சில நேரங்களில் கீழே விழுவதற்கு வழிவகுக்கிறவாறு பாதிக்கப்பட்ட சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு திறன்” என்று அவர் விளக்கமளித்தார்.

இந்நோய் பிரதானமாக மரபணு சார்ந்ததாக இருக்கிறபோதிலும் நச்சுக் கலந்த காற்று மற்றும் நீருக்கு வெளிப்படுவது மற்றும் உணவுகளில் உலோகங்கள் கலந்திருப்பது ஆகிய அம்சங்களும் இது உருவாவதற்கான காரணங்களாக இருக்கக்கூடும். இந்நோய்க்கு உரிய மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும் கூடுதலாக உடல் சார்ந்த, தொழில்/பணி சார்ந்த மற்றும் பேச்சு சிகிச்சை முறைகளையும் நோயாளிகள் பெறுவது முக்கியம். ஆரோக்கியமான உணவுகளை உண்பதும், தசைகளை வலுப்படுத்தவும், சமநிலை நெகிழ்வுத்திறன் மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், தவறாமல் உடற்பயிற்சி செய்வதும் அவசியம். தசை இறுக்கத்தை குறைப்பதற்கு மசாஜ் சிகிச்சை முறையையும் இந்நோயாளிகள் பயன்படுத்தலாம். உடல் உறுப்புகளின் நெகிழ்வுத்திறனையும் நீட்சியையும் அதிகரிக்க யோகா கடைபிடிப்பதும் சிறந்த பலன்களை தரும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்