வேர்க்கடலை என்பது சுலபமாக கிடைக்கக்கூடிய, ஆனால் பல பயன்கள் கொண்ட உணவாகும். இது ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படுவதற்கு முக்கியக் காரணம், இதில் இருக்கும் அதிக அளவு சத்துக்களே.
100 கிராம் வேர்க்கடலையில் சுமார் 567 கலோரி, 25 கிராம் புரதம், 49 கிராம் கொழுப்பு மற்றும் பலவகைத் தாதுக்கள், வைட்டமின்கள் உள்ளன. இதில் வைட்டமின் பி வகைகள், வைட்டமின் ஈ, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை உள்ளன.
வேர்க்கடலையில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை மெல்ல செய்கிறது. இதனால், உணவுக்குப் பிறகு உடலில் உள்ள சர்க்கரை அளவு திடீரென உயர்வதை தடுக்கும். இதே நேரத்தில், மெக்னீசியம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது என்பதும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
இதய ஆரோக்கியத்திற்கு இதிலுள்ள பொட்டாசியம், மெக்னீசியம், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உடல் அழற்சியைத் தடுக்க உதவுகின்றன.
வேர்க்கடலையை வேகவைத்து சாப்பிடுவது மிகச் சிறந்தது. வறுத்ததைக் காட்டிலும், வேகவைத்ததில்தான் 4 மடங்கு அதிக ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உள்ளன. ஆனால், வேர்க்கடலைக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் முற்றிலும் தவிர்க்கவேண்டும்.