மருத்துவப் பலன் நிறைந்த அற்புதமான மூலிகை துளசி

திங்கள், 18 ஜூலை 2016 (14:50 IST)
துளசி மருத்துவப் பலன் நிறைந்த அற்புதமான மூலிகையாகும். துளசியில் பலவகை உண்டு. கருந்துளசி, செந்துளசி, நிலத்துளசி, கல்துளசி, நாய்த்துளசி என்று அநேகத் துளசிச் செடிகள் உள்ளன.


 


கருந்துளசி, கிருஷ்ணதுளசி என்று அழைக்கப்படுகிறது. சாதாரண துளசியும், கிருஷ்ண துளசியும் ஒரே குணமுள்ளவை. கிருஷ்ண துளசி கொஞ்சம் காரமுள்ளவை.
 
* துளசி இலையைச் சாப்பிடலாம். செரிமானத்துக்கு உதவும். பசியைத் தூண்டும். தினமும் ஓரிரு துளசியைச் சாப்பிட நோய்கள் நம்மை எளிதில் அண்டாது. நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். சளி, இருமல், கிருமித்தொற்று போன்றவற்றைக் குணமாக்கும்.
 
* தொண்டை வலி மார்புச்சளி இவைகளுக்கு துளசித்துவையல் நல்லது. மிளகை நெய்யில் வறுத்து கறிவேப்பிலை, உப்பு, புளி சேர்த்துத் துளசியை வதக்கித் துவையல் செய்து சோற்றில் பிசைந்து சாப்பிடலாம். காலை நேரத்தில் துளசி இதழை மென்று தின்னச் சரீரத்திலுள்ள விஷக் கிருமிகள் நாசமடையும்.
 
* துளசி மண்ணீரலிலும், குரல் வளைகளிலும் வேலை செய்யக் கூடியது. மூளைக்கு சுறுசுறுப்பை உண்டாக்கி புத்திக் கூர்மையை உண்டு பண்ணும். மிளகும், துளசியும், சேர்த்து அரைத்து, காலை, மாலை இருவேளை நெல்லிக்காய் அளவுக்கு உண்ண விஷக் காய்ச்சல் நீங்கும். வைரஸ் காய்ச்சலை விரட்டி அடிக்கும்.
 
* காலை வெறும் வயிற்றில்,கைப்பிடி அளவுக்குத் துளசி இலைகளை நன்றாக மென்று தின்று, தண்ணீர் அருந்துங்கள் (1 டம்ளர்). 24 மணி நேரம் நீங்கள் பட்டினியாக இருக்க வேண்டும். காபி, தேநீர் என்று எதையும் அருந்தக் கூடாது. தண்ணீர் மட்டும் குடிக்கலாம். இன்றைக்குக் காலை 7 மணிக்கு எதுவும் சாப்பிடாமல் இருந்து அடுத்த நாள் காலை 7 மணிக்கு நீங்கள் எலுமிச்சம் பழச்சாறு ஒரு குவளை அருந்த வேண்டும் வேண்டுமெனில் தேன் அல்லது உப்பு சேர்த்துக் கொள்ளலாம். 8 மணிக்குச் சிற்றுண்டி அல்லது சாப்பாடு என்று ஏதேனும் ஒன்றைச் சாப்பிட்டுத் ‘‘துளசி விரதத்தை’’ முடித்துக்கொள்ளலாம். இதனால் உங்கள் உடம்பிலுள்ள அனைத்து விஷங்களும் நீங்கிவிடும். உங்கள் உடம்பு தூய்மை பெற்று விளங்கும். பசி அதிகரிக்கும் செம்புப்பாத்திரத்தில் வைத்த துளசித் தீர்த்தத்தைத் தினந்தோறும் அருந்தி வந்தால் சரீர ஆரோக்கியம் ஏற்படும். குன்ம வயிற்றுவலி, அஜீரணம், விஷக் காய்ச்சல்கள், கிராணிபேதி ஆகியவை நீங்கிவிடும்.
 
* துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.
 
* துளசி இருதயத்திற்கும், ஈரலுக்கும் பலத்தைக் கொடுக்கும். பசியை உண்டாக்கும். நுரையிரலில் சேர்ந்துள்ள கபத்தை அறுத்து வெளியேற்றும். குழந்தைப் பெற்ற பெண்களுக்கு பால் சுரப்பு உண்டாகும். பெண்களின் உதிரச்சிக்கலை நீக்கும். துளசி இலையைக் கசக்கி முகர்ந்தால், மூக்கடைப்பு நீங்கிவிடும். துளசி இலையை வாயிலிட்டு மெல்லுவதால் பற்கூச்சம், பல்வலி முதலியவைகள் போகும்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்