பணம் குவிக்கும் தேங்காய் கொட்டாங்கச்சி!

கொட்டாங்கச்சி எதற்குப் பயன்படும்? வீட்டில் விறகு அடுப்பு இருந்தால் அதில் எரிக்க அல்லது கலைப் பொருட்கள் செய்யப் பயன்படும். இரண்டும் இல்லாவிட்டால் குப்பைத் தொட்டியில் வீசி எறியப்படும்.

இந்தக் கொட்டாங்கச்சியையும் பணமாக்கலாம் என்பது தான் புது விஷயம். தேங்காய் கொட்டாங்கச்சிக்கு பெருகியுள்ள உலகளாவிய ஏற்றுமதி வாய்ப்புதான் இதற்குக் காரணம்.

பல நாடுகளில் பல்வேறு மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருளாக கொட்டாங்கச்சி மாறிவிட்டதால், நமது மாநில ஏற்றுமதிப் பொருட்களின் பட்டியலில் கொட்டாங்கச்சியும் இடம் பிடித்துவிட்டது.

இதனால், தென் மாவட்டங்களில் வீடு தேடி வந்து கொட்டாங்கச்சிகளை வாங்கத் தொடங்கிவிட்டனர்.

கொட்டாங்கச்சியின் வேதியியல் தன்மையை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் அதை கரித்தூள் பவுடராக (Activated charcoal) மாற்றி விஷத் தன்மையை முறிப்பதற்குப் பயன்படும் ஒரு மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தலாம் என அறிவித்தனர்.

இதுதரவி மருத்துவப் பொருளான அன்டாசிட் (antacid) தயாரிக்கவும் பெருமளவில் பயன்படுகிறது. இதனாலேயே கொட்டாங்கச்சியின் மதிப்பு கூடிவிட்டது.

கேரளத்தில் 42 சதவீதமும், தமிழகத்தில் 25 சதவீதமும் தென்னை மரங்கள் உள்ளன. எனவே, இந்த இரு மாநிலங்களிலிருந்துதான் கொட்டாங்கச்சி அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கொட்டாங்கச்சியை உடைத்து வறுத்துப் பொடி செய்து விற்றால் கிலோ ஒன்றுக்கு ரூ.16 வரை பெறலாம்.

கொட்டாங்கச்சி பவுடர் (35%), மரத்தூள் (52.9%), டி-டிரான்ஸ் அல் லெத்ரின் (0.1%), மரிக்கேல் மாவு அல்லது மைதா மாவு (12%) ஆகியவற்றை கெட்டியாக அரைத்து அதனுடன் சிறிதளவு சிட்ரனில்லா அல்லது லெமன்கிராஸ் கலக்க வேண்டும். இதை அச்சுகளில் கூம்பு அல்லது குச்சி வடிவமாகவோ, தேவைக்கேற்ற வகையிலோ வடிவமைத்தால் அதுவே கொசுவர்த்திச் சுருளாகிறது.

"இடவசதி இருந்தால் இத்தகைய கொசுவர்த்தி உற்பத்தி மையங்களை ரூ.30,000 என்ற எளிய முதலீட்டில் தொடங்கலாம். உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு நல்ல விற்பனை வாய்ப்பும் உள்ளது.

இதற்கான தொழில் பயிற்சி முகாமை மதுரை கோமதிபுரத்தில் உள்ள சுற்றுச்சூழல் தொண்டு மையம் (சென்ஸ்) அளித்து வருகிறது என்றார்" அந்த அமைப்பின் நிறுவனர் எஸ்.வி.பதி.

"மருந்து, திரவங்கள், கொசுவர்த்திச் சுருள் தயாரிக்கப் பயன்படும் பொருளாக மட்டுமின்றி, வர்ணம், வெடிபொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் கொட்டாங்கச்சியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே, கொட்டாங்கச்சிக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை. சற்று சிரத்தை இருந்தால் சிரட்டையிலும் பணம் ஈட்டலாம்" என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் என். கணசேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்