வங்கி வேலை தேர்வுக்கான தகுதி மற்றும் வயது வரம்பு தளர்வு
புதன், 24 ஜூலை 2013 (17:50 IST)
FILE
பொதுத்துறை வங்கிப் பணியிடங்களுக்கு வங்கிப் பணியாளர் தேர்வு மையம் (IBPS) நடத்தும் பொதுத் தேர்வுக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இதன்படி, இந்தத் தேர்வில் பங்கேற்க பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 60 மதிப்பெண் தேவை என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்ச்சி பெற்ற அனைத்து பட்டதாரிகளும் வங்கியாளர்களுக்கான தேர்வில் பங்கேற்கலாம்.
மேலும், தேர்வில் பங்கேற்பதற்கான வயது வரம்பு 28 லிருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இத்துடன், கம்ப்யூட்டர் கல்வி அவசியம் என்ற விதிமுறையும் நீக்கப்பட்டுள்ளது. இதனால், அதிக அளவில் பட்டதாரிகள் IBPS பொதுத் தேர்வில் பங்கேற்க வழி ஏற்பட்டுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை வங்கிகள் நீங்கலாக 20 பொதுத்துறை வங்கிகளில் அலுவலர்களை தேர்வு செய்வதற்கான தேர்வை IBPS நடத்தி வருகிறது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள், 20 பொதுத்துறை வங்கிகள் நிர்ணயிக்கும் 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
அதில் தேர்ச்சி பெற்றவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வரும் அக்டோபரில் IBPS தேர்வு நடைபெற உள்ள நிலையில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற ஆண்டு ஜூன் மாதம் 22,400 பணியிடங்களுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.