நாளை டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு: 1,225 காலியிடங்களுக்கு 4 லட்சம் பேர் போட்டி
சனி, 10 ஏப்ரல் 2010 (12:19 IST)
நாளை நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்த 20 ஆயிரம் பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, சார்-பதிவாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், நன்னடத்தை அதிகாரி, பேரூராட்சி நிர்வாக அதிகாரி, வருவாய் துறை உதவியாளர் உள்பட பல்வேறு விதமான பதவிகளில் 1,225 காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2 தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
பட்டப் படிப்பை கல்வித்தகுதியாக இந்த தேர்வுக்கு இளநிலை பட்டதாரிகள் மட்டுமின்றி, முதுநிலை பட்டதாரிகள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், விவசாய பட்டதாரிகள் உள்பட 4 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ள 4 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டுள்ளது.
குறைந்த வயது, தேர்வுக்கட்டணம் செலுத்தாமை, அதிக வயது, விண்ணப்பத்தில் கையெழுத்திடாமை, கடைசி தேதிக்கு பின் விண்ணப்பம் அனுப்பியது உள்பட பல்வேறு காரணங்களினால் 20 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளோர் விவரம், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதுபற்றிய தகவல் ஆகியவற்றை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டும் ஹால்டிக்கெட் கிடைக்கப் பெறாதவர்கள் தங்கள் விண்ணப்ப எண் அல்லது பெயர் மற்றும் பிறந்த தேதியை இணையதளத்தில் குறிப்பிட்டு டூப்ளிகேட் ஹால்டிக்கெட்டை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
இத்தகைய விண்ணப்பதாரர்கள் தேர்வுக்குச் செல்லும்போது இந்த ஹால்டிக்கெட்டையும், ஒரு வெள்ளைத்தாளில் தங்கள் போட்டோ ஒட்டப்பட்டு, அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரியிடம் அட்டஸ்டேஷன் வாங்கிச்சென்று தேர்வு எழுதலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
குரூப்-2 தேர்வு தமிழகம் முழுவதும் நாளை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 104 இடங்களில் 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். சென்னையில் மட்டும் 256 இடங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. குரூப்-2 தேர்வுக்கான முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல்வேறு துறைகளில் ஊழியர் பற்றாக்குறை இருந்து கொண்டிருப்பதால் பணிநியமனத்தை விரைந்து முடிக்குமாறு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, தேர்வு நடத்தி முடித்த கையோடு தேர்வு முடிவையும் விரைவாக வெளியிட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.