தமிழக அரசின் 5,566 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு
வெள்ளி, 14 ஜூன் 2013 (14:47 IST)
FILE
இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்துத் தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கான தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
இளநிலை உதவியாளர் (பிணையம்) (62), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (3469), தட்டச்சர் (1738), சுருக்கெழுத்து தட்டச்சர் (242), பில்கலெக்டர் (19), வரைவாளர் (30), நில அளவர் (6) என மொத்தம் 5,566 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி. தேர்வில் பங்கேற்க குறைந்தபட்ச வயது 18 ஆகும்.
தேர்வுக்கு இன்று (ஜூன் 14, வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 15. ஆகஸ்ட் 25 ஆம் தேதி தேர்வு நடைபெறும். தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் தாலுகாக்கள் என மொத்தம் 258 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
தேர்வாணைய இணையதளத்தில் இணையவழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே, நிரந்தரப் பதிவை வைத்து பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை பதிவு செய்து, இப்பதவிக்கான இதர விவரங்களை பதிவு செய்யலாம். நிரந்தரப் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணங்களை இந்தியன் வங்கிக் கிளைகள் மற்றும் அஞ்சலகங்களில், தேர்வுக்கு விண்ணப்பித்த இரண்டு நாள்களுக்குள் செலுத்திவிட வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம்.
இதுகுறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800 425 1002-ல் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.