இந்தியர்களின் அதிர்ஷ்ட தேசம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
திங்கள், 27 ஜூலை 2009 (16:14 IST)
உலகம் முழுவதும் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்ட போதிலும், இந்தியர்களைப் பொறுத்தவரை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிர்ஷ்ட தேசமாகத் திகழ்வது சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கேரளாவில், “வளைகுடா நாடுகளின் பொருளாதாரப் பின்னடைவும்; தெற்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் அதனால் ஏற்பட்ட தாக்கமும்” என்ற கருத்தரங்கம் சமீபத்தில் நடந்தது.
இந்த மாநாட்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) நாட்டிற்கான இந்தியத் தூதர் வேணு ராஜமோனி பேசுகையில், யு.ஏ.இ.யில் தற்போதைய நிலவரப்படி 15 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் 12 லட்சம் பேர் துபாய், வடக்கு எமிரேட்ஸ் பகுதியில் தங்கியுள்ளனர்.
யு.ஏ.இ.யில் உள்ள இந்தியர்களில், தென்மாநிலங்களான கேரளா, தமிழகம், ஆந்திராவைச் சேர்ந்தவர்களே அதிகம் என இந்தியத் தூதரகம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த 2008 நிலவரப்படி இந்தியர்களின் அதிர்ஷ்ட தேசப் பட்டியலில் யு.ஏ.இ. முதன்மையானதாக இருந்ததாகவும், அதற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா, ஓபன், கத்தார், குவைத், மலேசியா, பஹ்ரைன் ஆகிய நாடுகள் இடம்பெற்றதாகவும் தூதர் வேணு ராஜமோனி கூறினார்.