பருவநிலை மாற்றம்: பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த குறும்படம் வெளியீடு

வியாழன், 12 நவம்பர் 2009 (12:31 IST)
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன், சி.பி.ராமசாமி சுற்றுச்சூழல் கல்வி மையம் (CPREEC) மற்றும் தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் குறும்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

webdunia photo
WD
சென்னையில் இன்று நடந்த ‘பள்ளிகளுக்கான இந்திய-இங்கிலாந்து பட வெளியீட’ (Indo-UK Films for School Project) நிகழ்ச்சியில், தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சிலின் இயக்குனர் கிரிஸ் கிப்ஸன் குறும்படங்களை வெளியிட, தமிழக தலைமை வனப் பாதுகாவலர் டாக்டர் ஆர்.அண்ணாமலை பெற்றுக் கொண்டார். முன்னதாக, CPREEC மையத்தின் இயக்குனர் நந்திதா கிருஷ்ணா அனைவரையும் வரவேற்றார்.

பட வெளியீட்டுக்கு பின்னர் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் வகுப்புகள் நடைபெற்றது. இதில் பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் ஆகியவற்றின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எப்படி என ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டது.

தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சிலின் துணை இயக்குனர் கத்தார் சிங் மற்றும் சென்னையின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 50க்கும் அதிகமான அசிரியர், ஆசிரியைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட குறும்படங்களுக்கு ஆங்கிலம், தமிழ் மொழிகளில் விளக்கக் குறிப்பேடு வழங்கப்படுவதால், அவற்றை மாணவர்களின் மொழித் திறனுக்கு ஏற்ப ஆசிரியர்களால் விரிவாக விளக்க முடியும் என பிரிட்டிஷ் கவுன்சில் தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மொத்தம் 16 படங்கள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்