இந்திய விமான போக்குவரத்து அனுமதி பெற்ற கருடா ஏரோஸ்பேஸ்!!

வியாழன், 29 டிசம்பர் 2022 (19:41 IST)
இந்திய விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் Type Certification மற்றும் RTPO ஆகிய  இரண்டு அனுமதியை பெற்றிருக்கும் கருடா ஏரோஸ்பேஸ் 2 ஆண்டுகளில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் என்று அக்னீஸ்வரன் தெரிவித்தார்.


இந்திய விமான போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் சான்றிதழ் மற்றும் பைலட் பயிற்சிக்கான அனுமதியை, கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியாவில், ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறியவகை விமானங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக, கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் விளங்குகிறது. சென்னையை தலைமையிடமாக வைத்து இயங்கும் இந்த நிறுவனம், வேளாண் துறையில் ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த நிறுவனத்திற்கு, Type Certification மற்றும் RTPO அனுமதியை, டி.ஜி.சி.ஏ எனப்படும் இந்திய விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் தற்போது வழங்கி உள்ளது. இந்தியாவில், இந்த அனுமதியை பெறும் முதல் ட்ரோன் தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையை, கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

டி.ஜி.சி.ஏ Type Certification சான்றிதழ் என்பது, ட்ரோன்களின் தரத்தை ஆய்வு செய்து, பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பின் வழங்கப்படும். இந்த சான்றிதழ், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ட்ரோன் விதிகளின்கீழ் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த அனுமதியை பெற்றதன் மூலம், வேளாண் உள்கட்டமைப்பு நிதியில் இருந்து, குறைந்த வட்டியில் 10 லட்சம் ரூபாய் கடன் பெறவும், 50 முதல் 100 சதவீதம் வரை மானியம் பெறவும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தின்மூலம், அடுத்த 2 ஆண்டுகளில் 1 லட்சம் ட்ரோன் பைலட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும், இதனால் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருடா ஏரோஸ்பேஸ் நிறுவன சி.இ.ஓ அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் வெளியிட்ட அறிக்கையில்: இந்திய விமான போக்குவரத்து பொது இயக்குநரகத்திடம் இருந்து அனுமதி கிடைத்துள்ளதை, எங்கள் ட்ரோன்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறோம். பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்த கிசான் ட்ரோன் திட்டம், விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அடுத்த 5 மாதங்களில், 5000 ட்ரோன்களை தயாரிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம். எங்கள் ட்ரோன்கள், விவசாயிகள் மட்டுமல்லாமல் வேளாண் சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதில், இந்த ட்ரோன்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சமீபத்தில், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர், ட்ரோன் யாத்திரையை துவக்கி வைத்தார். அப்போது, அடுத்த ஆண்டிற்குள், இந்தியாவுக்கு 1 லட்சம் ட்ரோன்கள் தேவைப்படும் என குறிப்பிட்டார். இந்தியாவின் அந்த இலக்கை அடைய, நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம்.இந்தியாவின் சாதனைப்படைத்த ட்ரோன் நிறுவனமாக திகழவேண்டும் என்பது எங்கள் எண்ணம் அல்ல, இந்திய மக்கள் 100 கோடி பேரின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தூதராக இணைந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சமீபத்தில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததோடு, திரோனி என்ற புதிய வகை ட்ரோனை அறிமுகம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவன சி.இ.ஓ அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் மற்றும்  ஷியாம் குமார் -  சிஓஓ,   ராம்குமார் - வைஸ் பிரசிடெண்ட் உடனிருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்