நடப்பு ஐபிஎல் சீசனில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஆர்சிபி அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் இறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்களை எடுத்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1வது பந்திலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணிக்காக சதம் அடித்த ஜாஸ் பட்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் ஆர்சிபி அணிக்காக இறங்கிய கோலி 72 பந்துகளில் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் விளாசி 113 ரன்களை குவித்தார். ஆனால் ஐபிஎல் வரலாற்றில் இது மோசமான சாதனையாக அமைந்துவிட்டது. அதிக பந்துகளை விரயம் செய்து சதம் அடித்த வீரர் என்ற வகையில் 67 பந்துகளில் சதம் அடித்து, 2009ல் மனிஷ் பாண்டே செய்த ஸ்லோ பேட்டிங்கை இது சமன் செய்துள்ளது. ஐபிஎல் கெரியரில் குறைந்த பாலில் சதம் அடித்த சாதனையை 2013ல் கிரிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதம் அடித்து சாதித்தார். இதில் ஒற்றுமை என்னவென்றால் இந்த மூன்று பேருமே ஆர்சிபி அணிக்காக இந்த சாதனைகளை செய்துள்ளனர்.
சதம் அடித்ததில் கோலி மோசமான சாதனை படைத்திருந்தாலும், ஃபீல்டராக கேட்ச் பிடித்ததில் சூப்பர் சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரராக 110 கேட்சுகள் பிடித்து சாதனை பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார் கோலி. முன்னதாக இந்த சாதனையில் 109 கேட்சுகளுடன் முதலிடத்தில் இருந்த சின்ன தல ரெய்னாவை இரண்டாம் இடத்திற்கு தள்ளியுள்ளார். அதிரடி சிக்ஸர் மன்னன் கைரன் பொலார்ட் 103 கேட்ச்சுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.