விராட் கோலி அபார சாதனை: இரட்டை சதம் விளாசி அசத்தல்

ஞாயிறு, 9 அக்டோபர் 2016 (14:33 IST)
இந்தூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இரட்டைச் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
 

 
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி நேற்று இந்தூரில் தொடங்கியது. முரளி விஜய் 10 ரன்களில் வெளியேறினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பிய கவுதம் கம்பிர் 29 ரன்களில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். புஜாரா 41 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
 
இதனால், இந்திய அணி 100 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர், விராட் கோலியுடன் ரஹானே இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
 
முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் குவித்திருந்தது. சதத்தை நிறைவு செய்திருந்த விராட் கோலி 103 ரன்களுடனும், ரஹானே 79 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
 
இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி தனது இரட்டை சதத்தை [18 பவுண்டரிகள்] நிறைவு செய்தார்.
 
இந்திய அணி கேப்டன் ஒருவர் இரு முறை இரட்டை சதத்தை செய்வது இதுவே முதன்முறை. அதுவும் விராட் கோலி ஒரே ஆண்டில் இரட்டை சதத்தை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இதற்கிடையில் ரஹானேவும் 150 ரன்களை கடந்தார். இந்திய அணியும் 450 ரன்களைக் கடந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. நியூசிலாந்து தரப்பில் ஜேசன் பட்டேல் 2 விக்கெட்டுகளையும், ட்ரெண்ட் போல்ட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்