முதல் காலிறுதிப் போட்டி - தென் ஆப்பிரிக்கா Vs இலங்கை : ஓர் முன்னோட்டம்

லெனின் அகத்தியநாடன்

செவ்வாய், 17 மார்ச் 2015 (20:20 IST)
ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் காலிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோத உள்ளன. சம பலத்துடன் உள்ள இரு அணிகளில் வெல்லப் போவது யார் என்பது குறித்த முன்னோட்டம் இது.
 

 
ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் 59 முறை மோதியுள்ளன. அதில் இலங்கை 29 முறையும், தென் ஆப்பிரிக்கா 28 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி ‘டை’யில் முடிந்துள்ளது. உலகக்கோப்பை போட்டிகளில் இரு அணிகளும் 4 முறை மோதியுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா 2 முறையும் இலங்கை ஒரு முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டி ‘டை’யில் முடிந்துள்ளது.
 
இந்த உலகக்கோப்பையில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த இலங்கை 6 ஆட்டங்களில் விளையாடி நான்கில் வென்று இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது. அதேபோல ‘பி’ பிரிவில் இடம் பெற்றிருந்த தென் ஆப்பிரிக்காவும் 6 ஆட்டங்களில் விளையாடி நான்கில் வென்று இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது.
 
அணி வீரர்கள்:
 
தென் ஆப்பிரிக்கா:
ஏபி டி வில்லியர்ஸ் (கே), ஹசீம் அம்லா, கெய்ல் அப்போட், பர்ஹான் பெஹார்டியன், குயிண்டன் டி காக் (வி.கீ.), ஜேபி டுமினி, டு பிளஸ்ஸி, இம்ரான் தாகிர், டேவிட் மில்லர், மோர்னே மோர்கல், வெய்ன் பார்னெல், ஆரோன் பாங்கிசோ, வெர்னோன் பிளந்தர், ரிலீ ரோஸோவ், டேல் ஸ்டெய்ன்.
 
இலங்கை:
ஆஞ்சலோ மேத்யூஸ் (கே), திலகர்த்தனே தில்ஷான், குமார் சங்ககாரா, மஹேலா ஜெயவர்த்தனே, லஹிரு திரிமன்னே, திசாரே பெரேரா, சுருங்கா லக்மல், லசித் மலிங்கா, நுவன் குலசேகரா, ரங்கணா ஹெராத், சசித்ரா செனநாயகே, துஷ்மந்தா சமீரா, உபுல் தரங்கா, பிரசன்னா, குசல் பெரேரா
 
அணி நிலவரம்:
 
தென் ஆப்பிரிக்கா:
இந்த உலகக்கோப்பை போட்டியில் தலா 6 ஆட்டங்களில் விளையாடி ஏபி டி வில்லியர்ஸ் 417 ரன்களும், ஹாசிம் அம்லா 307 ரன்களும்,  டேவிட் மில்லர் 275 ரன்களும் குவித்துள்ளனர். டு பிளஸ்ஸி 5 ஆட்டங்களில் விளையாடி 277  ரன்களும் குவித்துள்ளார்.
 
அதுபோல பந்துவீச்சில் தலா 6 போட்டிகளில் விளையாடி மோர்னே மோர்கல் 13 விக்கெட்டுகளையும், இம்ரான் தாகிர் 11 விக்கெட்டுகளையும், டேல் ஸ்டெய்ன் 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். கெய்ல் அப்போட் 3 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
 
இலங்கை:
இந்த உலகக்கோப்பையில் தலா 6 ஆட்டங்களில் விளையாடி குமார் சங்ககாரா 496 ரன்களும், தில்ஷன் 395 ரன்களும், திர்மன்னே 261 ரன்களும் எடுத்துள்ளனர். ஆஞ்சலோ மேத்யூஸ் 3 ஆட்டங்களில் விளையாடி 176 ரன்கள் எடுத்துள்ளார்.
 
அதுபோல பந்துவீச்சில் மலிங்கா 6 போட்டிகளில் 11 விக்கெட்டுகளையும், ஆஞ்சலோ மேத்யூஸ், பெரேரா ஆகியோர் 5 போட்டிகளில் தலா 6 விக்கெட்டுகளையும், லக்மல் 4 போட்டிகளில் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

வீரர்களின் சாதனைகள்:
 
இலங்கை அணியின் முன்னணி பேட்ஸ்மேனான சங்ககாரா நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை 4 சதங்கள் உள்பட 496 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் இருக்கிறார். மேலும், இந்த உலகக்கோப்பை போட்டியில் தொடர்ந்து நான்கு சதங்களை அவர் பதிவு செய்துள்ளார்.
 
இதன் மூலம், ஒரு உலகக்கோப்பை போட்டியில் மட்டுமின்றி, ஒருநாள் போட்டியிலும் தொடர்ந்து 4 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை சங்ககாரா படைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 
உலகக்கோப்பை போட்டியில் அதிக சதம் விளாசி சாதனை படைத்தவர்களில் சச்சினுக்கு (6) அடுத்த இடத்தில் சங்ககாரா உள்ளார். சங்ககாரா இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் 5 சதங்கள் போட்டுள்ளார். இன்னும் ஒரு சதம் அடித்தால் அவர் சச்சின் சாதனையை சமன் செய்ய வாய்ப்புள்ளது.
 
பவுண்டரி விளாசுவதில் இலங்கை வீரர் சங்கக்காரா முதலிடத்தில் உள்ளார். இவர் 6 போட்டிகளில் 54 பவுண்டரிகளை அடித்துள்ளார். அதுபோல மற்றொரு வீரர் தில்ஷன் 46 பவுண்டரிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
 
மொத்த உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் குமார் சங்ககாரா 1487 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
 
இந்த உலகக்கோப்பை போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் பட்டியலில் லசித் மலிங்கா 11 விக்கெட்டுகளுடன் 12ஆவது இடத்தில் உள்ளார். அதே சமயம் மொத்த உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் வரிசையில் 42 விக்கெட்டுகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

இந்த உலககோப்பை போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ், 6 போட்டிகளில் 20 சிக்சர்களை விளாசியுள்ளார். இதன் மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னிலையிலும் இருக்கின்றார்.
 
டி வில்லியர்ஸ்
டி வி்ல்லியர்ஸ் உலகக்கோப்பை போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் இதுவரை 4 சதங்கள் அடித்துள்ளார்.
 
உலகக்கோப்பை போட்டிகளில் ஸ்டிரைக் ரேட் அதிகம் வைத்திருக்கும் வீரர்களில் முதலிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் [127.90] தான் முதலிடத்தில் உள்ளார். அதேபோல டி வில்லியர்ஸ் [116.05] 4ஆவது இடத்தில் உள்ளார். ஜேபி டுமினி [101.06] 15ஆவது இடத்தில் உள்ளார்.
 
இந்த உலகக்கோப்பை போட்டிகளில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தவர்களில் தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் [5/45] 5ஆவது இடத்தில் உள்ளார். கெய்ல் அப்போட் [4/21] 10ஆவது இடத்தில் உள்ளார்.
 
இந்த உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் வரிசையில் மோர்னே மோர்கல் 13 விக்கெட்டுகளுடன் 8ஆவது இடத்தில் உள்ளார். மொத்த உலகக்கோப்பை போட்டிகளில் சிறந்த பந்துவீச்சு சராசரியில் (Bowling Avg.) இம்ரான் தாஹிர் 8ஆவது இடத்தில் உள்ளார்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

வீரர்கள் கருத்து:
 
தென் ஆப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் ரஸ்ஸெல் டோமின்கோ:
 
தென் ஆப்பிரிக்க அணி கடந்த காலங்களில் பல நேரங்களில் நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டு இருக்கிறது. முந்தைய தவறுகளில் இருந்து நாங்கள் நிறைய பாடங்கள் கற்று இருக்கிறோம். பழைய மாதிரி நடக்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்து இருக்கிறோம்.
 
நெருக்கடியான கட்டங்களில் தென் ஆப்பிரிக்க அணி சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடந்த இலங்கை சுற்றுப்பயணத்தில் அந்த அணியை வீழ்த்தி இருக்கிறோம். இலங்கை அணி வீரர் சங்ககாரா லீக் ஆட்டங்களில் தொடர்ந்து 4 சதங்கள் அடித்து நல்ல பார்மில் இருக்கிறார்.
 
அவர் நிச்சயம் எங்கள் அணிக்கு சவாலாக இருப்பார். அவரை விரைவில் ஆட்டம் இழக்க திட்டங்கள் வைத்து இருக்கிறோம். அதனை நாங்கள் ஆட்டத்தின் போது செயல்படுத்துவோம்.
 
இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் ஜெயசூர்யா:
 
ஒருநாள் போட்டியில் தொடர்ந்து 4 சதங்கள் அடிப்பது என்பது அபூர்வமானதாகும். சங்ககாராவின் அந்த சாதனையை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சங்ககாராவின் இந்த சிறப்பான பார்ம் உலக கோப்பை போட்டி முழுவதும் தொடர வேண்டும்.
 

 
சங்கக்காரா தான் சிறப்பாக விளையாடுவதுடன், அணியின் மற்ற வீரர்களுக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக விளங்கி வருகிறார். அவர் அணியில் இணைந்தது முதல் எப்பொழுதும் கடின உழைப்பை அளித்து தினசரி ஆட்டத்தில் முன்னேற்றம் காண முயற்சிப்பவர்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

இலங்கை அணியின் பயிற்சியாளர் மார்வன் அட்டபட்டு:
 
”நாங்கள் இந்த போட்டியை எங்களது முதல் போட்டியை போன்றுதான் எடுத்துக் கொள்வோம். பேட்டிங்கோ, பந்துவீச்சோ ஆட்டத்தின் போக்கிலேயே நம்பிக்கையுடன் நாங்கள் கட்டமைக்க விரும்புகிறோம்.
 

 
உலகக்கோப்பை போட்டிகளில் எங்களுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. எங்கள் அணியில் உள்ள வீரர்கள் குறைந்தபட்சம் 15 போட்டிகளிலாவது விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் இது அதிகமானதுதான்.
 
ஆதலால் அவர்களுக்கு எவ்வாறு நம்பிக்கையுடன் விளையாட வேண்டும் என்று புரிந்து வைத்துள்ளனர். ஆதலால் இந்த போட்டியில் எங்களது அணியினர் திறமையாக விளையாடி நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.
 
தென் ஆப்பிரிக்கா கேப்டன் டி வில்லியர்ஸ்:
 
கால்இறுதி ஆட்டத்தில் முழு திறமையை வெளிபடுத்துவோம். அதில் தான் எங்களது முழு கவனமும் இருக்கிறது. கடந்த கால தோல்விகளை மறந்துவிட வேண்டும். ஏனென்றால் அது முடிந்துபோனது. லீக் போட்டிகளில் நாங்கள் சிறப்பாகவே ஆடினோம். பாகிஸ்தானுக்கு எதிராக பந்துவீச்சு நன்றாக இருந்தது. பேட்டிங்கில் சொதப்பிவிட்டோம். இம்முறை வரலாற்றை மாற்றி சாதிப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்