இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சி இன்னும் இந்திய ரசிகர்கள் ஓயவில்லை. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இந்தியா நிர்ணயித்த 176 ரன்கள் இலக்கைத் துரத்தியது. விக்கெட்கள் விழுந்தாலும் கிளாசன் அதிரடியாக ஆடி இலக்கை தொடும் தூரத்துக்குக் கொண்டுவந்துவிட்டார். அவர் அதிரடியால் தென்னாப்பிரிக்கா அணிக்கு கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் அதன் பிறகு இந்திய பவுலர்களின் அசத்தலான பவுலிங்காலும் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்களை இழந்ததாலும் அந்த அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
அந்த அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த டேவிட் மில்லர் கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று எல்லைக் கோட்டருகே சூர்யகுமாரின் ஒரு அபாரமான கேட்ச்சால் அவுட்டானார். ஆனால் கேட்ச் சரியான கேட்ச் இல்லை என்றும், அவர் கேட்ச் பிடித்த இடத்தில் பவுண்டரி லைன் குஷன் விலகி இருந்த அச்சு தெரிவதாகவும் சில ரசிகர்கள் விமர்சனம் செய்துவந்தனர். இதில் இந்திய ரசிகர்களும் அடக்கம்.