படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். இதையடுத்து அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தலையில், முதுகுப் பகுதியில், கால் முட்டியில் தசை நார் கிழிவு என சில இடங்களில் அடிபட்டுள்ளது. டேராடூன் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் தொடர்ந்து 18 மாத காலம் தொடர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவித்துள்ளார்களாம். அதனால் ஐபிஎல் தொடர்கள், 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் மற்றும் அடுத்த ஆண்டு நடக்கும் டி 20 உலகக் கோப்பை தொடர் ஆகியவற்றை இழக்க நேரிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் “ரிஷப் பண்ட் எங்கள் அணிக்கு தேவை. அவர் எப்போதும் அணியை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்பவர். அவர் இந்த ஆண்டு விளையாட முடியாது என்றாலும், பயணம் செய்யும் அளவுக்கு உடல்நலம் அனுமதித்தால், அவர் என்னோடு என் பக்கத்தில் டக் அவுட்டில் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.