கொல்கத்தா அணிக்கு தமிழக வீரர் பாலாஜி ’பவுலிங் கோச்’

புதன், 4 ஜனவரி 2017 (12:33 IST)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தமிழக வீரர் லக்ஷ்மிபதி பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.


 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இதுவரை பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் பணியாற்றி வந்தார். இந்நிலையில், 2017ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில், தமிழக வேகப்பந்து வீச்சாளர் லக்ஷ்மிபதி பாலாஜி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

லக்ஷ்மிபதி பாலாஜி 2011 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். அதே சமயம் 2015 ஆம் ஆண்டு தமிழக ரஞ்சி கோப்பை அணிக்காக, பாலாஜி பந்து வீச்சு பயிற்சியாளர் மற்றும் வீரராக செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கூறியுள்ள பாலாஜி, “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆடியபோது வீரர்களுடன் இணைந்து அனிபவித்து ஆடியுள்ளேன். தற்போது, அதே அணிக்கு பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது பெருமையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தலைவர் வெங்கி மைசூர், “பாலாஜி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குடும்பத்தில் மீண்டும் இணைவதை வரவேற்கிறோம். அவர் 2012ஆம் ஆண்டு கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்