தப்பிக்குமா இந்தியா?: வலுவான நிலையில் இலங்கை!

சனி, 18 நவம்பர் 2017 (18:45 IST)
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளதால் இந்திய அணி இந்த போட்டியில் தோல்வியில் இருந்து தப்பிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


 
 
மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக முதல் இரண்டு நாட்கள் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த இரண்டு நாட்களும் வெறும் 32.5 ஓவர்களே வீசப்பட்டது. இதில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி மூன்றாம் நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது.
 
இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 52, சஹா 29, சமி 24, ஜடேஜா 22 ரன்கள் எடுத்தனர். இலங்கை பந்துவீச்சாளர்களில் லக்மல் 4 விக்கெட்டுகளையும் காமேகா, ஷனகா மற்றும் பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 
அதன் பின்னர் களம் இறங்கிய இலங்கை தொடக்க வீரர்கள் சொதப்பினாலும் மூன்றாவது விக்கெட்டுக்கு கைகோர்த்த திரிமன்னே மேத்தியூஸ் ஜோடி அபாரமாக விளையாடியது. இவர்கள் இருவரும் அரை சதம் அடித்தனர். மூன்றாம் நாள் ஆட்டம் வெளிச்சமின்மையால் விரைவாக முன்னதாக முடிக்கப்பட்டது.
 
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. சண்டிமால், திக்வெலா ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்தியா அணியை விட 7 ரன்களே பின் தங்கியுள்ள இலங்கை அணி மேற்கொண்டு 150 ரன்கள் குவித்தாலே அது இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்