இன்னிங்ஸ் தோல்வி அடைந்த இலங்கை; டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா

ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (15:15 IST)
கொழும்பில் நடைப்பெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது.


 

 
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி தலைமையிலான  இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இலங்கையை எளிதில் வீழ்த்தி அபார வெற்றிப்பெற்றது. கொழும்பில் நடைப்பெற்ற இரண்டாவது டெஸ்ட் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிப்பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. 
 
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. புஜாரா(133), ரஹானே(132) ஆகியோரின் சதத்தால் இந்தியா அணி வலுவான நிலைக்கு சென்றது. சகா மற்றும் ஜடேஜே ஆகியோரின் அரை சதம் இந்திய அணியை 600 ரன்களை கடக்க உதவி செய்தது. 9 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. ஜடேஜா 85 பந்துகளில் 70 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
 
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி 183 ரன்களில் சுருண்டது. அஸ்வின் பந்துவீச்சில் மடிந்துபோனது இலங்கை. அஸ்வின் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இலங்கை அணி 439 ரன்கள் பின்தங்கி இருந்தது. இந்நிலையில் பாலா-ஆன் விழுந்ததை தடுக்க இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
 
கருணாரத்னே - குசால் மெண்டிஸ் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சதமடித்து இலங்கை அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினர். மெண்டிஸ் 110 ரன்களில் வெளியேற அவரைத்தொடந்து புஸ்பகுமாரா மற்றும் சந்திமால் சொற்ப ரன்களில் வெளியேறினர். 
 
பின் நிலைத்து ஆடிய கருணாரத்னேவும் 141 ரன்களில் வெளியேற வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தது. இறுதியில் இலங்கை அணி 386 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்களில் வெற்றிப்பெற்றது. 
 
மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. 

வெப்துனியாவைப் படிக்கவும்