அஸ்வின் மாய சுழலில் சிக்கி சிதைந்தது இங்கிலாந்து - இந்தியா 200 ரன்கள் முன்னிலை

சனி, 19 நவம்பர் 2016 (14:45 IST)
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.


 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 455 எடுத்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் விராட் கோலி 167 ரன்களும், சத்தீஸ்வர் புஜாரா 119 ரன்களும், அஸ்வின் 58 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், மொய்ன் அலி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர், முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளுக்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பெப் ஸ்டோக்ஸ் 12 ரன்களுடனும், பைர்ஸ்டொ 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து அணி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதால், 200 ரன்களை தாண்டாது என்று நினைத்திருந்தனர்.

இந்நிலையில், இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் 255 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பெப் ஸ்டோக்ஸ் 70 ரன்களிலும், பைர்ஸ்டொ 53 ரன்களிலும் வெளியேறினர். அடில் ரஷித் 32 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

200 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்