ரோஹித்தை நான்தான் கேப்டன் ஆக்கினேன் என்பதை எல்லோருமே மறந்துவிட்டார்கள்- கங்குலி ஆதங்கம்!

vinoth

திங்கள், 15 ஜூலை 2024 (07:32 IST)
கடந்த 2021 ஆம்  ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, டி 20  கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். பின்னர் அவர் ஒரு நாள் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் டெஸ்ட் தொடரில் இருந்தும் கேப்டன் பதவியை துறந்தார். இதனால் பிசிசிஐக்கும் கோலிக்கும் இடையே கருத்து மோதல்கள் உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டன. அதன் பின்னர் இந்திய அணிக்குக் கேப்டனாக மூன்று வடிவ போட்டிகளிலும் ரோஹித் ஷர்மா செயல்பட்டு வருகிறார்.

இதுபற்றி சில மாதங்களுக்கு முன்னர் பேசிய கங்குலி “ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க சம்மதிக்கவில்லை. நான்தான் அவரை வற்புறுத்தி ஏற்கவைத்தேன். அவர் பொறுப்பை ஏற்கவில்லை என்றால் நானே அவர் பெயரை அறிவிப்பேன் என்று சொல்லுமளவுக்கு சென்றது. அவர் ஏன் அந்த பொறுப்பை ஏற்க மறுத்தார் என்பது தெரியவில்லை. ஆனால் கோலிக்கு பிறகு அந்த பொறுப்பை ஏற்று இந்திய அணியை வழிநடத்த அவர்தான் சரியான நபர் என்று நினைத்தேன்.” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி டி 20 உலகக் கோப்பையை வென்றுள்ள நிலையில் அதுகுறித்து பேசியுள்ள கங்குலி “நான் ரோஹித்தைக் கேப்டன் ஆக்கிய போது அது குறித்து எல்லோரும் என்னை விமர்சித்தார்கள். இப்போது கேப்டனாக ரோஹித் உலகக் கோப்பையை வென்றதும் விமர்சனங்கள் நின்றுவிட்டன. அதுமட்டுமில்லை, ரோஹித்தை நான்தான் கேப்டனாக நியமித்தேன் என்பதையே அனைவரும் மறந்துவிட்டனர்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்