கடந்த சீசனின் இறுதிப் போட்டி வரை வந்து சிஎஸ்கேவிடம் தோற்றது குஜராத் டைட்டன்ஸ். இதற்கு பதிலடியாக அதிரடி ஆட்டத்தில் குஜராத் இறங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. டாஸ் வென்று குஜராத் பௌவுலிங் எடுக்க, சிஎஸ்கே அணியோ அடைமழை வெளுத்து வாங்குவது போல சிக்ஸர்கள், பௌண்டரிகள் என சேப்பாக்கம் மைதானத்தில் பந்தை மழையாக பொழிந்தது.
இதனால் பவுலிங்கிலேயே திக்குமுக்காடி போன குஜராத்தை சேஸிங்கில் சிறப்பான சம்பவம் செய்தது சிஎஸ்கே. விஜய் சங்கரின் விக்கெட்டை தோனி பாய்ந்து சென்று கேட்ச் பிடித்தது அழகான மொமெண்ட் என்றால், இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா தொடர்ந்து பிடித்த கேட்ச் அவுட்கள் ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா ட்ரீட்.
முதலில் டேவிட் மில்லர் அடித்த பந்தில் ரச்சின் ஒரு சூப்பர் கேட்ச்சை தவறவிட்டார். அதனால் பேட்டிங் அளவுக்கு ரவீந்திராவுக்கு ஃபீல்டிங் வராதோ என்றே பலரும் நினைத்தனர். ஆனால் பவுண்டரி லைனில் நின்று கொண்டு அங்கு பவுண்டரி, சிக்ஸ் சாத்தியங்களோடு வந்த பந்துகளை அடுத்தடுத்து கேட்ச் பிடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ரச்சின்.
தொடர்ந்து ஒமர்சாய், தெவாட்டியா, ரஷித் கான் எல்லாருமே சிக்ஸ் அடிக்க முயன்று ரச்சின் ரவீந்திரா கேட்ச் பிடித்ததால் அவுட் ஆனார்கள். முதலில் சிஎஸ்கே அணியில் இப்படியாக பவுண்டரி லைனில் நின்று பந்துகளை பிடித்து விக்கெட்டுகளை வீழ்த்தும் எல்லைச்சாமியாக ஃபாப் டூ ப்ளெசிஸ் இருந்தார். இப்போது அவர் ஆர்சிபி கேப்டனாக தொடர்கிறார். இந்நிலையில் ரச்சின் ரவீந்திரா சிஎஸ்கேவுக்கு கிடைத்த புதிய எல்லைச்சாமி என குதூகலிக்கிறார்கள் ரசிகர்கள்.