உலக டெஸ்ட் சாம்பியன்ஷி போட்டி இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே லண்டன் ஓவல் மைதானத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது. நேற்று நடந்த இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில் பேட்டிங் செய்தபோது அடித்த ஒரு பந்தை கேமரூன் க்ரீன் கேட்ச் பிடித்து அவுட் செய்தார். அதில் பந்து தரையில் பட்டதா என்பது குறித்த சர்ச்சை உண்டான நிலையில் மூன்றாவது நடுவர் அதை அவுட் என உறுதி செய்ததால் சுப்மன் கில் வெளியேறினார்.
ஆனால் அந்த வீடியோவை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வரும் கிரிக்கெட் ரசிகர்கள் அதில் பந்து தரையில் பட்டுள்ளதாக சுட்டிக் காட்டி கேமரூன் க்ரீன் ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த போட்டியின்போதே கேமரூன் க்ரீன் பந்து வீச வந்தபோது “Cheat Cheat” என ரசிகர்கள் பலரும் கத்தியதால் பரபரப்பு எழுந்தது.
இந்த சர்ச்சைக்குரிய கேட்ச் விவகாரம் குறித்து பேசியுள்ள கேமரூன் க்ரீன் “சுப்மன் கில் கேட்ச்சை நான் பிடித்ததும், தரையில் படாமல் பிடித்து விட்டேன் என உறுதியாக நம்பினேன். அதை வெளிப்படுத்தும் விதமாகதான் விக்கெட் எடுத்ததை சந்தேகம் இல்லாமல் கொண்டாடினேன். நான் சரியாக கேட்ச் பிடித்து விட்டேன் என மூன்றாவது நடுவர் ரிச்சர்ட் கெடில்பரோவும் ஒத்துக் கொண்டு அவுட் கொடுத்துள்ளார்” என கூறியுள்ளார்.