சொந்த மண்ணில் கேவலமாக ஆடிய ஆஸி. - 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன கொடுமை [வீடியோ]

சனி, 12 நவம்பர் 2016 (16:49 IST)
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னின்ஸில் 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.


 

ஆவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 177 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று சனிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 85 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், ஜோ பர்ன்ஸ் ஆகியோர் 1 ரன்னில் வெளியேறினர். தொடர்ந்து உஸ்மான் கவாஜா 4 ரன்களிலும், ஆடம் வோக்ஸ் ரன் ஏதும் இல்லாமலும், ஃபெர்குசன் 3 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற ஆஸ்திரேலியா அணி 17 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் 25 பந்துகளை சந்தித்த பீட்டர் நெவில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். தொடர்ந்து, ஜோ மின்னே 10, மிட்செல் ஸ்டார்க் 4, ஹஸில்வுட் 8, நாதன் லயன் 2 என அடுத்தடுத்து நடைபயிற்சி மேற்கொள்வதுபோல வருவதும், போவதுமாக இருந்தனர்.

அணியின் மானத்தை காப்பாற்ற போராடிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் கடைசிவரை களத்தில் இருந்து 48 ரன்கள் எடுத்தார். 1988ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணி குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் பிளாந்தர் 5 விக்கெட்டுகளையும், கெய்ல் அப்போட் 3 விக்கெட்டுகளையும், ரபாடா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. குவிண்டன் டி காக் 28 ரன்களுடனும், டெம்பா பவுமா 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

வீடியோ கீழே:

 

வெப்துனியாவைப் படிக்கவும்