அஸ்வினின் மாய சுழலில் சிக்கி சின்னாபின்னமானது நியூசிலாந்து: 299 ரன்களுக்கு ஆல் அவுட்
திங்கள், 10 அக்டோபர் 2016 (16:17 IST)
இந்தூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 299 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி நேற்று இந்தூரில் தொடங்கியது. முரளி விஜய் 10 ரன்களில் வெளியேறினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பிய கவுதம் கம்பிர் 29 ரன்களில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். புஜாரா 41 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதனால், இந்திய அணி 100 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர், விராட் கோலியுடன் ரஹானே இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் குவித்திருந்தது. சதத்தை நிறைவு செய்திருந்த விராட் கோலி 103 ரன்களுடனும், ரஹானே 79 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி தனது இரட்டை சதத்தை [18 பவுண்டரிகள்] நிறைவு செய்தார்.
இந்திய அணி கேப்டன் ஒருவர் இரு முறை இரட்டை சதத்தை செய்வது இதுவே முதன்முறை. அதுவும் விராட் கோலி ஒரே ஆண்டில் இரட்டை சதத்தை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதியில் 211 ரன்கள் எடுத்து விராட் கோலி வெளியேறினார்.
இதற்கிடையில் ரஹானேவும் 150 ரன்களை கடந்தார். இரட்டைச் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 188 ரன்களில் [18 பவுண்டரிகள்] துரதிர்ஷ்டவசமாக வெளியேறினார். பிறகு ரோஹித் சர்மாவின் அரைச்சதத்தோடு, தனது முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது இந்திய அணி. இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 557 ரன்கள் குவித்தது.
பின்னர், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்ட தொடக்கத்தில் நியூசிலாந்து சிறப்பாக விளையாடியது. தேநீர் இடைவேளை வரை விக்கெட் விழாமல், தொடக்க ஆட்டக்காரர்கள் பார்த்துக் கொண்டனர். 118 ரன்கள் எடுத்திருந்தபோது டாம் லாதம் 53 ரன்கள் குவித்து வெளியேறினார்.
பிறது அந்த அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தன. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது சுழலில் ஜாலம் காட்டினார். பிறகு வந்த வீரர்களில் ஜேம்ஸ் நீசம் மட்டும் 71 ரன்கள் கடந்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
அஸ்வின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, இரண்டு வீரர்களை ரன் அவுட் மூலம் வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது. முடிவில் அந்த அணி 299 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், இந்திய அணி 258 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளது.