மகேந்திர சிங் டோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் பிறந்தார்.அப்பா அரசு நிறுவனமான மேகானில் வேலைப்பார்த்தார். ஏழ்மை சூழ்ந்த குடும்பம். அதனால் பெரும்பாலும் தன் பொழுதுகளை சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர். டோனிக்கு ஓவியம் வரைவது மிகவும் பிடிக்கும். விளையாட்டு நேரத்தை தவிர மீத நேரங்களை ஓவியம் வரைய செலவழித்தார்.
இளம் வயதில் டோனிக்கு பிடித்த விளையாட்டு கால்பந்து மற்றும் பாட்மிண்டன் தான்! பல காலமாக கால்பந்து அணியில் கோல் கீப்பராக இருந்தார் டோனி . ஒரு கிரிக்கெட் போட்டியின் பொழுது அணியின் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்ப்படடதால் டோனியை அவரது நண்பர்கள் கீப்பிங் செய்ய சொன்னார்கள். அப்போது கிரிக்கெட் விளையாடிய தோனிக்கு கால்பந்தை விட கிரிக்கெட் சிறப்பான விளையாட்டாக தோன்றியது. அப்படி தொற்றிக்கொண்டது தான் கிரிக்கெட் ஆர்வம் .
இளம் வயதிலேயே ரொம்பவே துறுதுறுப்பான பையன். டோனி வாழ்ந்த பகுதி முழுக்க மலைகளாக நிறைந்து இருக்கும் இளம் வயதில் சக நண்பர்களோடு இணைந்து மலையின் மேல் இருந்து கீழே இறங்கி விளையாடுவது தன்னை இன்னமும் உடல் வலுவுள்ளவராக வைத்து உள்ளதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அப்பா உடற்பயிற்சி வகுப்புகளுக்கு போக சொன்னால் எஸ்கேப் ஆகி நண்பர்களோடு ஊர் சுற்ற கிளம்பி விடுவார் .
இளம் வயதில் பீகார் அணியில் ஆடிக்கொண்டு இருந்தார். அப்பொழுது பல போட்டிகளில் ஒற்றை ஆளாக டோனி சதம் அடித்து பலரை வியப்பில் ஆழ்த்தினார். ஆனால் அவருடைய அணி தோற்றுக்கொண்டு இருந்தது. அதனால் பெரும்பாலும் தோனியால் இந்தியா அணிக்குள் நுழைய முடியவில்லை.அந்த தருணத்தில் இந்தியா அளவில் இளம் திறமைகளை கண்டறியும் வேலையை பி.சி.சி.ஐ செய்தது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தோனி இந்தியா ஏ அணிக்காக ஆடி கென்யா, ஜிம்பாப்வே அணிகளோடு மோதினார். ஜிம்பாப்வே அணியில் விளையாடிய தோனி சதம் அடித்ததை கண்டு வியந்தார் அப்போதைய கேப்டன் சவ்ரவ் கங்குலி. அதற்கு பிறகு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார் டோனி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆரம்பத்திலேயே ரன் அவுட் ஆனார்.
எனினும் இவர் திறமை மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்புகள் தந்தார் கங்குலி. பாகிஸ்தான் உடன் ஆன போட்டியில் சிறப்பாக விளையாடிய டோனி 148 ரன்கள் குவித்து கவனம் பெற்றார். இலங்கையுடன் ஆன போட்டியில் பேட்டிங் செய்தபோது 183 ரன்கள் அடித்தார். அதன்மூலம் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்னும் உலக சாதனையை படைத்தார். அதற்கு பின் ஐயர்லாந்து தொடரில் இந்தியா அணியின் துணைக்கேப்டன் ஆனார். 2007 இருபது ஓவர் உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்தியா அணியின் கேப்டன் ஆனார். தனது அபாரமான ஆட்டத்தாலும், திறமையாக அணியை வழி நடத்தியதாலும் கோப்பையை வென்றது இந்திய அணி.
2011 டோனி வாழ்க்கையில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 1983க்கு பிறகு உலக கோப்பை ஒருநாள் போட்டிகளில் இந்தியா ஒருமுறை கூட வெற்றிபெறவில்லை. 2011 உலக கோப்பை சச்சினின் இறுதி உலகக்கோப்பை. இந்த உலக கோப்பையை நாங்கள் சச்சினுக்காக வெல்வோம் என களமிறங்கினார் தோனி. இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் தனது வேகத்தை காட்டினார் தோனி. 274 ரன்கள் பெற்றிருந்த இலங்கையை 48வது ஓவரில் ஒரே சிக்ஸர் அடித்து வீழ்த்தினார். 23 வருடங்களுக்கு பிறகு இந்தியா உலக கோப்பையை வென்றது. அப்பொழுது சச்சின் நான் பார்த்த கேப்டன்களில் டோனி தான் தலை சிறந்தவர் என புகழ்ந்தார்
லதா மங்கேஷ்கரின் பாடல்கள் பிடிக்கும்;சச்சின் மற்றும் கில்க்ரிஸ்ட் பிடித்த விளையாட்டு வீரர்கள். வீடியோ கேம் வெறியர். கவுன்ட்டர் ஸ்ட்ரைக் பிடித்த வீடியோ கேம். ஓவியம் வரைவதில் சிறு வயதிலிருந்தே ஆர்வம். புதிய பைக்குகள் சேகரிப்பதில் ஆசை அதிகம். ஹர்லி டேவிட்சன் பைக்குகள் எல்லாமும் அவரிடம் உண்டு .
ஜார்கண்ட் அரசாங்கம் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க ஸ்கூல் செல்வோம் நாம் என்கிற விளம்பரத்தில் தோனியை நடிக்கக் கூப்பிட்ட பொழுது ஒரு ரூபாய் கூட பெற்றுக்கொள்ளாமல் இலவசமாக நடித்தார். தன் மனைவியின் பெயரால் சாக்ஷி அறக்கட்டளை உருவாக்கி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள்,ஆதரவற்ற பிள்ளைகள் ஆகியோருக்கு நிறைய உதவிகள் செய்து வருகிறார்.
தனது வாழ்க்கையிலும், கிரிக்கெட் விளையாட்டிலும், இந்திய மக்கள் மனதிலும் தனக்கென தனி முத்திரை பதித்து ”தல” தோனியாக என்று இருக்கிறார் மகேந்திர சிங் தோனி.