மரணத்தின் கடைசி வினாடியிலும் மன்னிப்பை வழங்கினார். தன்னைக் கைது செய்ய வந்தவர்களுக்கும் கருணையை நீட்டினார். தன்னைக் காட்டிக்கொடுத்தவனையும் ‘நண்பா’ என்றழைத்தார். தன்னை இகழ்ந்தவர்களுக்காய் செபித்தார். அறைந்தவர்களுக்காய் மன்னிப்பை வேண்டினார். கடைசி வினாடியில் கூட லட்சியத்திலிருந்து பின்வாங்கும் வாய்ப்பு அவருக்கு இருந்தது. ஆனால் இறுதி வரை உறுதியாய் இருந்தார். அந்த உறுதி நமக்குள் பிறக்க வேண்டும்.
இயேசுவே இறைவன், ஆனாலும் தனது மனித அவதாரத்தில் தன்னை அனுப்பிய தந்தையாம் இறைவனின் வழிகாட்டலும், கருணையும் தேவைப்பட்டது. அதற்காக அவர் ஜெபித்தார். தந்தையின் வழிகாட்டுதல் இல்லாமல் அவர் எதையும் செய்யவில்லை.
சோதனைகளை அடக்க அவருக்கு ஜெபம் துணை செய்தது. கர்வத்தை விரட்ட அவருக்கு ஜெபம் துணை செய்தது. வேதனைகளைக் கடக்க அவருக்கு ஜெபம் துணை செய்தது. லட்சியத்தில் நடக்க அவருக்கு ஜெபம் துணை செய்தது. ஜெபம்! சிங்கத்தின் வலிமையை சிற்றெறும்புக்கு ஊட்டும். சூரியனின் வெம்மையை தீக்குச்சிக்கும் தரும். ஜெபம், நமது பல வீனங்களை இறைவனின் பலத்தால் கடக்கும் உன்னத வழி. அந்த ஜெபம் நமக்குள் பிறக்க வேண்டும்.