இயேசுவின் பிறப்பும்.... கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்புகளும்....

திங்கள், 4 டிசம்பர் 2017 (21:27 IST)
இயேசுவின் பிறப்பு: 
 
கபிரியேல் என்ற இறைத்தூதர், கன்னி மரியாளிடம் பரிசுத்த ஆவிமூலமாக இயேசு பிறக்கப்போவதை முன்னறிவித்தார். அச்சமயம் மரியாள் யோசேப்பு என்பவருக்கு மணமுடிக்க நிச்சயிக்கப் பட்டிருந்தார்.  
 
மரியாள் கற்பமாயிருப்பதை தெரிந்து கொண்ட யோசேப்பு மரியாளை இரகசியமாக விலக்கிவிட நினைத்தார். இறைத்தூதர் யோசேப்புக்கு தோன்றி மரியாள் கருத்தரித்திருப்பது பரிசுத்த ஆவியினால் என்பதை தெரிவிக்கவே யோசேப்பு மரியாளை மனைவியாக ஏற்றுக்கொண்டார். 
 
மரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது பாலஸ்தீனத்தை ஆட்சி செய்த உரோமைப் பேரரசன் அகுஸ்துஸ் மக்கள் தொகை கணிப்பீடு ஒன்றை கட்டளையிட்டார். அவர் கட்டளைப்படி யோசேப்பும் மரியாளும் தங்களை பதிவு செய்ய யோசேப்பின் முன்னோரான தாவீதின் நகரமான பெத்லகேமுக்குச் சென்றனர். 
 
தங்குவதற்கு அறைகள் கிடைக்காத நிலையில் மாட்டுத் தொழுவமொன்றில் தங்கினார்கள். அம்மாட்டுத் தொழுவத்தில் மரியாள் இயேசுவை பெற்றார். 
 
கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள்:
 
இயேசு பிறந்த போது வானில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி, கிழக்கத்திய ஞானிகள் சிலர் அவரை வணங்கச் சென்றனர். அவர்கள் வானியலில் சிறந்து விளங்கிய பெர்சிய மத குருக்களான கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்பது கிறிஸ்தவ மரபு.  அந்த ஞானிகளுக்கு வழிகாட்டிய நட்சத்திரத்தை அடையாளப்படுத்தவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன. 
 
கிறிஸ்துமஸ் கீதம்: 
 
உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! என்று கடவுளைப் புகழ்ந்து, வானதூதர்கள் பாடிய இந்த பாடலே முதல் கிறிஸ்துமஸ் கீதம் ஆகும். இதை பின்பற்றி இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் கிறிஸ்துமஸ் கீதங்களை ஆலயங்களில் பாடும் வழக்கம் 4 ஆம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டது. 
 
கிறிஸ்துமஸ் மரம், சாண்டாக்ளாஸ்:
 
1841 ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் ஆல்பர்ட் தனது அரசு முறை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ்  மரத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். சாண்டாக்ளாஸ் இரவில் யாருக்கும் தெரியாமல் பரிசுப் பொருட்களை வீட்டுக்குள் எறிந்துவிட்டு போவதாக உலகமெங்கும் இருக்கும் குழந்தைகளை நம்பவைக்கிறார்கள். துருக்கி நாட்டைச் சார்ந்த செயின்ட் நிக்கோலஸ் என்கிற பாதிரியார்தான் உலகின் முதல் கிறிஸ்துமஸ் தாத்தா என்று சொல்லப்படுகிறார்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்