தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் கட்சிகளால் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இதனால் அவரது பெயர் கெட்டுவிட்டதாக அவர் நினைக்கிறார். இதற்கு காரணம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் என அவர் மீது ஆளுநர் கோபத்தில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அதிமுக வட்டாரத்தில் ஆளுநரின் கோபம் தொடர்பாகவும், ஆட்சியை கலைக்க அவர் ஆலோசித்திருப்பதாகவும் மேல் மட்டத்தில் இருந்து நிர்வாகிகள் வரை பரபரப்பாக பேசப்படுகிறது. அதனை கீழே விரிவாக பார்ப்போம்.
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் பரபரப்பான அரசியல் சூழலில் சில தினங்களுக்கு முன்னர் சென்னை வந்தார். அப்போது எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய கோரிய வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதனை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்திருக்கிறார்.
அதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு போன் அடித்த ஆளுநர் 18 எம்எல்ஏக்களை ஏன் தகுதி நீக்கம் செய்தீர்கள், ஒரு வார்த்தை என்னிடம் சொல்லியிருக்கலாமே இப்பொழுது எவ்வளவு சிக்கல் என கோபமாக கேட்டுள்ளார். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அருண் ஜெட்லிகிட்ட கேட்டுட்டுதான் செஞ்சோம், அவரு உங்களுக்கு சொல்லியிருப்பார் என நினைத்தோம் என கூறியுள்ளார்.
அவங்க சொல்லுவாங்க, இவங்க சொல்லுவாங்க என நீங்க நினைத்திருக்க கூடாது. நீங்களே என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். அவசரப்பட்டு நீங்க முடிவெடுத்துட்டீங்க. இப்போ எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து என் பெயரை இழுத்துட்டிருக்காங்க. நான் தானே பதில் சொல்லனும். நீதிமன்றத்துக்கும் பதில் சொல்லனும் என சற்று காட்டமாகவே பேசியுள்ளார் ஆளுநர்.
அதன் பின்னரும் கோபம் குறையாத ஆளுநர் தலைமை செயலாளருக்கு போன் போட்டு இப்படியொரு நடவடிக்கை எடுக்க போறாங்கனு நீங்களாவது என்னிடம் சொல்லியிருக்கலாம். இனிமே என்னுடைய கவனத்துக்கு வராம எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. அது முதலமைச்சரே சொன்னாலும் என்னிடம் அனுமதி வாங்கித்தான் ஆகனும் என ஸ்ட்ரிக்டாக கூறியுள்ளார்.
மேலும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து தனது ஆந்திரா நண்பர்களிடம் வித்தியாசாகர் ராவ் ஆலோசித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு வர உள்ள குடியரசுத் தலைவரை மகாராஷ்டிரா ஆளுநர் என்ற முறையில் வரவேற்க செல்ல உள்ள வித்தியாசாகர் ராவ் தமிழக அரசியல் குறித்து விரிவாக பேச உள்ளாராம்.
அப்போது தமிழக சட்டமன்றத்தை சஸ்பெண்ட் செய்யலாம் என்பதையே தனது ஆலோசனையாக கூற உள்ளதாக ஆந்திர நண்பர்களிடம் கூறியுள்ளார். இந்த தகவல்கள் அதிமுக வட்டாரத்தில் கசிந்து மேல் மட்டத்தில் இருந்து நிர்வாகிகள் வரை இதனை பரபரப்பாக பேசுகிறார்கள்.