மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலா உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் 12 பேரை துரோகம் செய்ததால் அதிமுக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார். பின்னர் சசிகலாவை மட்டும் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்ததால் மீண்டும் சேர்த்துக்கொண்டார்.
ஆனால் சசிகலாவின் மற்ற குடும்ப உறுப்பினர்கள் யாரையும் அவர் கட்சியில் சேர்க்கவில்லை. ஜெயலலிதா மரணிக்கும் வரை அவர்களை அனுமதிக்கவே இல்லை. ஆனால் ஜெயலலிதா இறந்த பின்னர் அந்த காட்சிகள் அப்படியே மாறின. ஜெயலலிதாவின் உடலை சசிகலாவின் மன்னார்குடி குடும்பத்தினர் சுற்றி நின்றனர். வேறு யாரையும் அங்கு நிற்கவிடவில்லை அவர்கள்.
ஜெயலலிதா இருக்கும் வரை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் டி.டி.வி.தினகரன், வெங்கடேஷ் உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்களை அவர் அங்கு அனுமதிக்கவில்லை. ஆனால் தற்போது ஜெயலலிதா இறந்த பின்னர் அவர்கள் அங்கு இருக்கின்றனர். ஆளுநரை சந்திக்க சசிகலா சென்ற போது அவருடன் டி.டி.வி.தினகரன் சென்றார் இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இருந்தாலும் நேற்று எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்திக்க அமைச்சர்களுடன் சென்றபோதும் அவர்களுடன் டி.டி.வி.தினகரன் சென்றார். இதனை ஜெயலலிதாவின் விசுவாசிகள் விரும்பவில்லை. இந்நிலையில் இன்று உச்சக்கட்டமாக இரண்டு நிகழ்வுகள் நடந்துள்ளது, அது அதிமுக தொண்டர்களை மிகவும் எரிச்சலடைய வைத்துள்ளது.
இன்று காலை டி.டி.வி.தினகரன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்வதாக சசிகலா அறிவித்துள்ளார். அவர்கள் இருவரும் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்ததால் அவர்களை சேர்த்ததாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான டாக்டர் நமது எம்ஜிஆரில் கூறியுள்ளார் சசிகலா.
மேலும் சசிகலா தற்போது சிறையில் அடைக்கப்பட இருப்பதால் அதிமுக கட்சியினை தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைக்க ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்ட தனது சகோதரி மகனான டி.டி.வி.தினகரனை அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக நியமித்து உத்தரவிட்டுள்ளார். இது அதிமுகவினரை மிகவும் கோபமடைய வைத்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ததால் அவர்களை அவர் வெளியேற்றினார். ஆனால் ஜெயலலிதா இறந்த பின்னரும் சசிகலா அவருக்கு துரோகம் செய்கிறாரே என அதிமுக வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். ஜெயலலிதா இருந்திருந்தால் அவர் இவர்களை சேர்த்திருப்பாரா என குமுறுகின்றனர்.