கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த காஷ்மீரில் புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக அடுத்த நாள் பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இந்தத் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்.
இதையடுத்து போர்க்கைதியாக சிக்கிய விமானி அபிநந்தனை இந்தியா மற்றும் உலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தாலும் நல்லெண்ண அடிப்படையிலும் பாகிஸ்தான் விடுதலை செய்தது. அதையடுத்து நேற்று இரவு 9 மனி வாக்கில் விமானி அபிநந்தன் இந்திய அதிகாரிகள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் டிபிரீஸிங் ஆகிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன் பின்னரே அவர் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டு ஊடகங்களை சந்திக்க அனுமதிக்கப்படுவார் என தெரிகிறது.
கடந்த சில தினங்களாக நடந்து முடிந்த இந்த உணர்ச்சிகரமான சம்பவங்களை மையப்படுத்தி திரைப்படங்களைத் தயாரிக்க இப்போதே பாலிவுட் தயாரிப்பாளர்கள் போட்டி போட ஆரம்பித்துவிட்டனர். தேசபக்தி என்பது எப்ப்போதும் சினிமாவில் கல்லா கட்டும் கான்செப்ட் என்பதால் இப்ப்போதே அபிநந்தன் மற்றும் புல்வாமாத் தாக்குதல் குறித்து படமாக்க பல தயாரிப்பாளர்கள் தங்கள் சங்கங்களில் படத்திற்கான பெயர்களைக் கூட பதிவு செய்ய ஆரம்பித்து விட்டனர் எனப் பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. தயாரிப்பாளர்களின் இந்த பணத்தாசையை பாலிவுட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர். தயாரிப்பாளர்களின் இந்த அவசரத்திற்கு சமீபத்தில் வெளியான தேசபக்தி மற்றும் துல்லியத் தாக்குதல் படங்களின் அமோக வரவேற்பேக் காரணம் எனக் கூறப்படுகிறது.