பாம்பை காணிக்கை தரும் பக்தர்கள்!

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நம் நாட்டு மக்கள் வேண்டுதல்களின் மீது அபார நம்பிக்கை கொண்டவர்கள். தங்களின் பிரார்த்தனை நிறைவேறுவதற்காக எத்தகையை முயற்சிகளையும் செய்யத் துணிவார்கள். அதற்கு ஒரு உதாரணம்தான் பாம்பை காணிக்கை தரும் வினோத வழிபாடு.

இந்த வாரம் 'நம்பினால் நம்புங்கள்' பகுதியில் நாம் பார்க்கப் போவது, மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் அருகே உள்ள நாகமந்திர் கோயிலைத்தான். உதாவலி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோயில், அங்குள்ள அத்வால் குடும்பத்தினருக்குச் சொந்தமானது.

விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாளில் வரும் ரிஷி பஞ்சமி தினத்தன்று, பல்வேறு கோரிக்கைகள், வேண்டுதல்களுடன் நாகமந்திர் கோயிலுக்கு பக்தர்கள் குவிகிறார்கள்.

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், தாங்கள் வேண்டிக்கொண்டபடி ஒரு ஜோடி பாம்பை காணிக்கையாக்குவதையும் அன்றைய தினம் பார்க்கலாம். இதற்காக பாம்புகளை அங்குள்ள பாம்பாட்டிகளிடம் வாங்குகிறார்கள்.

பாம்புக் காணிக்கை குறித்து திலீப் யாதவ் என்ற பக்தர் கூறுகையில், '25 ஆண்டுகளாக நான் இந்த கோயிலுக்கு வந்து பாம்புக் காணிக்கை அளித்து வருகிறேன்' என்றார்.

webdunia photoWD
நாக மந்திர் கோயிலைப் பற்றி ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. முன்னொரு காலத்தில் இப்பகுதியில் உள்ள காட்டிற்கு குதிரையில் சில வீரர்கள் சென்றனர். அப்போது அரியாசனம் ஒன்றை சுற்றியபடி இருந்த மனித உடலமைப்புக் கொண்ட பாம்பு ஒன்று, தன்னை காப்பாற்றும்படி வீரர்களைப் பார்த்து கேட்டதாம்.

வீரர்களும் பாம்பை காப்பாற்றினர். அவர்களுக்கு ஆசி வழங்கி, தன்னைத் தேடி இங்கு வருவோருக்கு வேண்டியது நடக்கும் என்று அந்த பாம்பு அருளியதாம்.

காணிக்கைகாகச் செலுத்தப்படும் பாம்புகளால் பக்தர்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படவில்லை என்பது ஆறுதலான விஷயம். ஆனால், வாயில்லா அந்த ஜீவன்களை 'வேண்டுதல்' என்ற பேரில் வருத்துவது நல்லதா?

பக்தர்களுக்கு பாம்பை பிடித்துத்தரும் ஆட்கள், அவற்றை துன்புறுத்துவதை எவ்வாறு ஏற்க முடியும்? இத்தகைய இறை வழிபாடு தேவைதானா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எதுவானாலும் எங்களுக்கு எழுதுங்கள்.

புகை‌ப்பட‌த் தொகு‌ப்பு!