இஸ்ரேல் மத திருவிழா நெரிசலில் சிக்கி 45 பேர் பலி - அதிர்ச்சியில் தலைவர்கள்

வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (23:53 IST)
இஸ்ரேல் நாட்டின் மெரோன் நகரில் உள்ள ரப்பி ஷிமான் பர் யோசாய் கல்லறையில் லேக் பி ஒமெர் ஆண்டுத் திருவிழாவில் பங்கேற்க வந்த யாத்ரீகர்கள் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கியதில் சுமார் 45 பேர் பலியானார்கள். அந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு உத்தரவிட்டுள்ளார்.
 
இஸ்ரேலில் உள்ளூர் நேரப்படி இந்த சம்பவம் வியாழக்கிழமை நள்ளிரவைக் கடந்த ஒரு மணியளவில் நடந்துள்ளது. சம்பவ பகுதியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு வெள்ளிக்கிழமை பார்வையிட்டு, இத்தகைய பேரிடர் இனி நடக்காதவாறு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
 
சம்பவ பகுதியில் மனதை உருக்கும் வகையிலான காட்சிகளை பார்த்தேன். சிறு குழந்தைகள் உள்பட பலரும் நசுங்கி உயிரிழந்துள்ளனர் என்று இஸ்ரேல் பிரதமர் கூறினார்.
 
 
இஸ்ரேல் வரலாற்றிலேயே இது மிகவும் மோசமான சம்பவம் என்றும் உயிரிழந்தவர்களின் நினைவாக வரும் ஞாயிற்றுக்கிழமை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார்.
 
நடந்த சம்பவத்தில் சுமார் 150 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே, பலியானவர்களின் இறுதிச்சடங்குகள் அதே நகரில் நடந்தன. உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் பலரும் கண்ணீர் மல்க இறுதி நிகழ்வுகளில் பங்கெடுத்தனர்.
 
 
சம்பவம் எவ்வாறு நடந்திருக்கலாம்?
உள்ளூர் நேரப்படி நள்ளிரவைக் கடந்த ஒரு மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது பழங்கால கல்லறை அமைந்த பகுதியும் சேதம் அடைந்ததாக கூறப்பட்டது.
 
ஆனால், ஹாரெட்ஸ் நாளிதழிடம் பேசிய காவல்துறையினர், படிக்கட்டு பகுதியில் பலரும் கால் தடுக்கி சரிந்ததையடுத்து ஏராளமானோர் சரிய நேரிட்டது என்று கூறினர். ஆனால், இந்த தகவலை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.
 
குறுகலான பாதையில் மக்கள் கூட்ட நெரிசலுக்கு இடையே வருவதை ஆன்லைனில் பகிரப்பட்ட பல்வேறு காணொளிகள் காண்பித்தன.
 
நடந்த சம்பவத்துக்கான ஒட்டுமொத்த பொறுப்பை தாமே ஏற்றுக் கொள்வதாக உள்ளூர் காவல் தலைமை அதிகாரி ஷிமோன் லெவி தெரிவித்தார். பயங்கரமான அந்த இரவில் தங்களால் இயன்ற அனைத்தையும் தமது காவலர்கள் செய்தனர் என்று அவர் ஏஎஃப்பி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த அந்த இடத்தில் நகருவதற்கு கூட இடமின்றி மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
"திடீரென துணை மருத்துவ ஊழியர்கள் அங்குமிங்குமாக ஓடினார்கள்," என்று கூறிய ஷ்லோமோ, பிறகு ஒன்றன் பின் ஒன்றாக சடலங்களை வெளியே கொண்ட வந்தபோதுதான் அங்கு ஏதோ மோசமாக நடந்துள்ளது என்பதை அறிந்தோம் என்று கூறினார்.
 
பெருந்தொற்றுக்கு மத்தியில் திருவிழா
 
இஸ்ரேலில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி திட்டத்தின் பயனாக அங்கு அமலில் இருந்த பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் சமீபத்தில் தளர்த்தப்பட்டன.
 
இந்த நிலையில், அங்கு வாழும் யூதர்களால் புனித ஆன்மிக திருவிழாவாக நம்பப்படும் மெரோன் நகரில் உள்ள இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவியான ரப்பி ஷிமோன் பர் யோச்சாய் கல்லறை ஆண்டு விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கானோர் சென்றுள்ளனர்.
 
இந்த புனிதத் தலம் பெரும்பாலும் ஆண்கள், பெண்களுக்கான தனி வழியை கொண்டதாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்